அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி டூ ரூ.150 கோடி வரை காங்., மேலிடத்துக்கு லஞ்சம்? கர்நாடகா பாஜக பகீர்
பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் அமைச்சர் பதவியை பெற காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை லஞ்சம் பெறப்படுவதாக கர்நாடகா பாஜக பகீர் என குற்றம்சாட்டி உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. சித்தராமையா முதல்வரானார். முதல்வராக சித்தராமையா 3 ஆண்டை நிறைவு செய்தார்.

இதையடுத்து சித்தராமையா சமீபத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் ஜூன் மாதம் 3ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன் மொத்தம் 13 பேர் அமைச்சராக பொறுப்பேற்றனர்.
கர்நாடகாவை எடுத்து கொண்டால் முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது 14 பேர் மட்டுமே உள்ளனர். 20 இடங்கள் காலியாக உள்ளனர். இதனால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் அமைச்சர் பதவியை பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பல எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டு அமைச்சர் பதவியை பெற காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அமைச்சரவையில் யாரையெல்லாம் சேர்ப்பது? என்பது தொடர்பாக முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக இவர்கள் 2 பேரும் இன்று மாலையில் பெங்களூரில் இருந்து டெல்லி செல்ல உள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் மீது கர்நாடகா பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது அமைச்சர் பதவி கேட்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடியை காங்கிரஸ் மேலிடம் வசூலித்து வருவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி (பாஜக) தலைவர் ஆர்.அசோக் பெங்களூரில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:
''அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சர் பதவியை பெற விரும்பும் எம்எல்ஏக்களிடம் காங்கிரஸ் மேலிடம் லஞ்சம் பெறுகிறது.
அமைச்சர் பதவி வழங்க எம்எல்ஏக்களிடம் காங்கிரஸ் மேலிடம் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை வசூலிக்கிறது. கர்நாடகாவில் தற்போது அமைச்சராக இருப்பவர்கள் 'Fighting Quota' முறையில் அமைச்சர்கள் ஆனார். இனி அமைச்சர்களாக வருபவர்கள் 'Money Quota' அடிப்படையில் வருவார்கள்'' என குற்றம்சாட்டி உள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு அசோக் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுபற்றி கர்நாடக துணை முதல் அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கும் நிலையில் பணம் கொடுப்பவர்களுக்கு தான் அமைச்சர் பதவி தருவதாக பாஜக தெரிவித்துள்ளது. அவர்கள் தங்களது கட்சியில் செய்த விஷயத்தை காங்கிரசிலும் நடக்கும் என்று நினைத்து பேசுகிறார். அவரது அரசியல் கலாசாரத்தை எங்கள் கட்சியுடன் ஒப்பிடுவது சரியல்ல.'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
