நானும் விஜய்யும் நண்பர்கள்தான்! ஆனால்.. டெல்லி மீட்டிங் பற்றி வெளிப்படையாக பேசிய டிகே சிவக்குமார்
பெங்களூர்: டெல்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினர். மேகதாது விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பூதாகரமாகியுள்ள நிலையில் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி சிரித்தபடி உரையாடினர். விஜய்யுடனான சந்திப்பு குறித்து டிகே சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு டிகே சிவக்குமார் அளித்த பதிலை இங்கு காணலாம்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் பேசி வருகிறார். டிகே சிவக்குமாரின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகா சென்ற போது அவரிடம் நேரடியாகவே இதுபற்றி டிகே சிவக்குமார் கோரிக்கை வைத்தார்.

டெல்லியில் விஜய் டிகே சிவக்குமார் சந்திப்பு
கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி முடிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் ஆளும் தவெக அரசு இதுபற்றி தற்போது வரை எந்த கருத்தும் சொல்லவில்லை.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நேற்று டெல்லியில் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அவர்கள் டி.கே. சிவக்குமார், விஜய் ஆகிய 2 பேரும் பரஸ்பரம் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டு சிரித்தப்படி பேசினர்.
விஜய்யுன் நானும் நண்பர்கள்
இதுகுறித்து பெங்களூரில் டி.கே. சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டி.கே. சிவக்குமார் அளித்த பதிலில் கூறியதாவது:- சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினேன். நாங்கள் நண்பர்கள்தான். அவர்களுக்கு சொந்த அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன.
திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் தலைவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை பார்த்தார்களா? என்று நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்கு நாங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே அதை நாங்கள் செய்வோம். மறு ஆய்வு மனுவுடன் அவர்கள் நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் என்ன நடந்தது? அவர்களுக்கு இனி என்ன வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
அடம்பிடிக்கும் கர்நாடகா
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பெரிய அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.16,750 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கர்நாடகா அனுப்பியுள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து வருகிறது.
கர்நாடாக அரசின் இந்த அடாவடிப் போக்குக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்ட அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில்தான், உச்ச நீதிமன்ற உத்தரவை பார்த்தார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியும் கோரி வருகிறது. தமிழ்நாட்டில் ஆளும் தவெக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சூழலில், ஆட்சியை காப்பாற்றுதவற்காக தமிழகத்தில் நலனை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.



Click it and Unblock the Notifications
