கேம் ஸ்டார்ட்.. ஆர்எஸ்எஸ் ஆதரவு அதிகாரிகளுக்கு “செக்”.. கர்நாடகாவில் களையெடுக்கும் காங்கிரஸ் அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்து இருக்கும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமாக இருக்கும் அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளை கண்டறிந்து ஓரம்கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலின்போது பஜ்ரங்தள் என்ற ஆர்எஸ்எஸ் துணை அமைப்பை தடை செய்யப்போவதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டது. இந்த நிலையில் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்று இருக்கிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகளின் பட்டியலை சித்தராமையாவும், டிகே சிவகுமாரும் தயாரித்து உள்ளனர்.

துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் காவல்துறை காவிமயமாவது குறித்து வெளிப்படையாகவே ஒருமுறை பேசி இருந்தார். அதிகாரிகள் சட்டவிதிகளின் படி செயல்பட அவர் அறிவுறுத்தி இருந்தார். ஆர்.எஸ்.எஸ். கொள்கையை பின்பற்றும் அதிகாரிகளை ஓரம்கட்டுமாறு காங்கிரஸ் தலைமையும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் குறிப்பாக மாநில உள்துறையில் இருக்கும் அதிகாரிகள் மீதே முதலில் ஆக்சன் எடுக்க கர்நாடக காங்கிரஸ் அரசு தயாராகி வருகிறதாம். பாஜக ஆட்சியின்போது இந்த துறையை சேர்ந்த அதிகாரிகள்தான் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிக குடைச்சல் கொடுத்ததுடன் இந்துத்துவ அஜெண்டாவை செயல்படுத்த உதவியதாக தற்போதைய அரசு கருதுகிறது.
குறிப்பாக கர்நாடக முன்னாள் டிஜிபி பிரவீன் சூதை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் சமயத்தில் முன்வைத்தார் டிகே சிவகுமார். கற்பனை கதாபாத்திரங்களான நஞ்சே கவுடா, உரி கவுடாவுக்கு முகப்பு மண்டபம் அமைக்க பிரவீன் சூத் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது. இவர்கள்தான் திப்பு சுல்தானை கொன்றதாக இந்துத்துவ செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் கர்நாடகா மாநில கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளையும் காங்கிரஸ் அரசு குறிவைத்து உள்ளது. குறிப்பாக அம்மாநிலத்தில் மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த முயன்ற அதிகாரிகள், பாடநூலில் திப்பு சுல்தான், பெரியார் பாடங்களை நீக்கிவிட்டு சாவர்க்கர் குறித்த பாடங்களை சேர்த்த அதிகாரிகளையும் மாநில அரசு களையெடுக்க முயல்வதாக பேச்சு அடிபடுகிறது.
அதேபோல் ஆர்.எஸ்.எஸ். அல்லது சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களின் பரிந்துரையால் கர்நாடக மாநில நிதித்துறை, நகர்புற மேம்பாட்டுத் துறை, பெங்களூர் பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், பெங்களூர் மேம்பாட்டு ஆணையத்தில் பணியில் சேர்க்கப்பட்ட அதிகாரிகளின் பட்டியலையும் தயாரித்து அவர்களை பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தில் அரசு உள்ளதாம்.
காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு சார்ந்த விசயங்களில் தற்போதைய காங்கிரஸ் அரசின் கொள்கைகள் முந்தைய பாஜக அரசின் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால், அந்த ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளை வைத்து திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும், அவர்கள் மீது தற்போதைய அரசுக்கு நம்பிக்கை குறைவாக உள்ளது எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications