அரசு மருத்துவமனையில் வேலைக்கே போகாமல் 70 ஆயிரம் சம்பளம்.. வசமாக சிக்கிய எம்எல்ஏ உறவினர்!
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கக் கூடிய உமேஷ் மெயிதியின் உறவினரான பெண் மருத்துவர் ஒருவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். வேலைக்கே செல்லாமல் ரூ.70 ஆயிரம் சம்பளம் பெற்றது வெளிச்சத்துக்கு வந்து இருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
சம்பவம் தெரியவந்ததும், உடனடியாக அவர் அரசு மருத்துவமனை பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ள இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பணிக்கு வராமலே சம்பளம்
கர்நாடகவில் மாநிலம் முழுக்க 'நம்ம கிளினிக்' என்ற பெயரில் அரசு மருத்துவனைகள் செயல்பட்டு வருகின்றன. பகல்கோட் பகுதியில் உள்ள நம்ம கிளினிக்கில் மெடிக்கல் ஆபிசராக அன்கிதா யாராகல் என்ற மருத்துவர் நியமனம் செய்யபட்டார். அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அதே நேரத்தில், தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டம் படித்து வந்துள்ளார்.
சமீப காலமாக தொடர்ச்சியாக நம்ம கிளினிக் மருத்துவமனைக்கு அன்கிதா பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து, பகால்கோட் ஜில்லா பஞ்சாயத்து சிஇஓவாக உள்ள கஜனன் பாலே என்பவர், அன்கிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மார்ச் மாதம் முதலே மருத்துவமனைக்கு பணிக்கு வராமல் இருந்த போதிலும் தொடர்ந்து ஊதியம் பெற்று வந்துள்ளார். ஜில்லா பஞ்சாயத்து அதிகாரி அனுப்பிய நோட்டீசில் ஊதியம் பெற்ற தகவலையும் குறிப்பிட்டு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்கிதாவுக்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, எழுத்துப்பூர்வ விளக்கத்துடன் வரும் 18 ஆம் தேதி ஜில்லா பஞ்சாயத்து சிஇஒ முன்பாக ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பணிக்கு வராமலே அன்கிதா சம்பளம் பெற்றது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து உடனடியாக அவரை பணியில் இருந்து மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ்குமார் யாரகால் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
முறையான அனுமதியின்றி இரு பணிகளில் ஈடுபட்ட காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஊதியம் அல்லது மதிப்பூதியத்தை விதிகளின்படி திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். விதிமீறல் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், இந்த விவகாரம் கர்நாடக மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திடம்பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரியான தந்தைக்கும் தொடர்பு?
அடுத்தகட்ட விசாரணையில் ஆஜராகத் தவறினால், அவரது விளக்கத்தைக் கேட்காமலேயே முடிவு எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், டாக்டர் அன்கிதாவின் தந்தையும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியுமான ராஜ்குமார் யராகல் இது குறித்து கூறுகையில், தனது மகள் எம்.டி. படிப்பில் சேர்ந்தது முதல் எந்த ஊதியமும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் அன்கிதா மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் அவரது தந்தைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்கிதாவுக்கு எதிரான புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை நடைபெறவில்லை. எம்.எல்.ஏவின் உறவினர் பெண் ஒருவர் பணிக்கு செல்லாமலே 70 ஆயிரம் ஊதிய பெற்று இருப்பதை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. இது டிகே சிவக்குமார் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
