40 பேர்.. சோனியா முதல் நடிகை ரம்யா வரை.. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்களின் லிஸ்ட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப சிதம்பரம், நடிகை ரம்யா உள்பட 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற உள்ளது.

மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் தொடர்ந்து வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளையுடன் வேட்புமனு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு நாளை மறுநாள் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை உருவாகும் எனவும், காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறுகின்றன. இங்கு தனித்து ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் எப்படியாவது தனி மெஜாரிட்டியை பெற காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, கேசி வேணுகோபால், கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஹரிபிரசாத், எம்பி பட்டீல், முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் மாஜி எம்பி கேஎச் முனியப்பா, முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜெய்ராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, கர்நாடகா முன்னாள் அமைச்சர்களான ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிகோளி, எம்பி டிகே சுரேஷ், சந்திரசேகர், சையத் நசீர் உசேன், ஜமீர் அகமத கான், எச்எம் ரேவண்ணா, நடிகையும் முன்னாள் அமைச்சருமான உமாஸ்ரீ, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ்யசபா எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம், எம்பி சசதி தரூர், நடிகை ரம்யா உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பாஜக சார்பில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 25 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு மாநில பாஜக தலைவரும், கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை உள்பட 25 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications