பிரசாரம்.. காங்கிரஸ் மாஜி துணை முதல்வரின் மண்டை உடைந்தது.. ரத்தம் சொட்ட சொட்ட ஓட்டம்.. பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் கல்வீசப்பட்டதில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ளன. இதில் 224 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.
இந்த தேர்தலில் துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக தற்போது அவர் உள்ள நிலையில் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பாஜக சார்பில் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அணில் குமார் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று காங்கிரஸ் வேட்பாளரான பரேமஸ்வரா பைரனஹள்ளி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு பெரிய மலர்மாலை அணிவிக்க முயன்றனர்.
இந்த வேளையில் அவரது தலையில் கல் தாக்கியது. யாரோ அவர் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பரமேஸ்வராவின் தலையில் இருந்து ரத்தம் சொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது காயமடைந்த பரமேஸ்வரா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்தார். மேலும் கடந்த 2013 சட்டசபை தேர்தலில் அவர் முதல்வராகும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்தலில் கொரட்டகெரே தொகுதியில் பரமேஸ்வரா தோற்றார். இதனால் சித்தராமையா முதல்வரானார்.
அதன்பிறகு கடந்த 2018 தேர்தலையொட்டி கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைந்தபோது பரமேஸ்வரா துணை முதல்வராக இருந்தார். இருப்பினும் அடுத்த ஓராண்டுக்குள் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து அவர் எம்எல்ஏவாக தொடர்ந்து இருந்தார்.












Click it and Unblock the Notifications