கைஓங்கிய எடப்பாடி.. கர்நாடகா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர்கள் நாளை வாபஸ்? என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் 3 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இதில் ஒருவரின் மனு தள்ளுபடியான நிலையில் 2 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ஓ பன்னீர் செல்வம் அணி தற்போது இன்னொரு பிரச்சனையை சந்தித்துள்ளதால் நாளை அவரது அணியின் 2 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை திரும்ப பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஒற்றை தலைமை பிரச்சனை உருவானது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பொதுக்குழு மூலம் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக மாறிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இருப்பினும் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்புகள் நீதிமன்றங்களில் கிடைத்த நிலையில் அவரை அதிமுக பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையே தான் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா தலைநகர் பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசிநகர் சட்டசபை தொகுதியில் அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுகிறார்.
மாறாக கர்நாடகா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் அணி பெங்களூர் புலிகேசி நகரில் நெடுஞ்செழியன், பெங்களூர் காந்திநகர் தொகுதியில் குமார், கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தியது. இதில் புலிகேசிநகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோலார் தங்கவயல் தொகுதி வேட்பாளர் அனந்தராஜாவின் மனு ஏற்கப்பட்டாலும் அவர் சுயேச்சை வேட்பாளராக தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக அவர் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக பெங்களூர் காந்திநகர் தொகுதி ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் உள்ளார். ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அணி வேட்பாளரான குமாருக்கு அதிமுக வேட்பாளர் என்ற அங்கீகாரம் அளிக்க கூடாது என கர்நாடகா தேர்தல் அதிகாரியிடம் எடப்பாடி பழனிச்சாமி அணி புகார் அளித்தது.
இந்த புகாரை தொடர்ந்து குமாருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் அணி சிக்கலில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் இருந்து ஓ பன்னீர் செல்வம் அணி முழுமையாக பின்வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது ஓ பன்னீர் செல்வம் அணியின் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு தள்ளுபடியான நிலையில் கோலார் தங்கவயல் வேட்பாளர் அனந்தராஜா மற்றும் காந்திநகர் தொகுதி வேட்பாளர் குமார் ஆகியோர் நாளை தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என கூறப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பபெற கடைசிநாளான நாளை ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கர்நாடகாவில் அதிமுக என ஓ பன்னீர் செல்வம் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என அவரும் அவரது ஆதரவாளர்களும் நம்பினர். இதையடுத்து தான் அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து கடைசி நாளில் வேட்புமனுக்கள் செய்தனர். ஆனால் அன்றைய தினமே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இதற்கிடையே தான் காந்திநகர் தொகுதி வேட்பாளர் குமாருக்கும் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் வேறு வழியின்றி நாளை காந்தி நகர் வேட்பாளர் குமார் மற்றும் கோலார் தங்கவயல் வேட்பாளர் ஆனந்தராஜா ஆகியோர் மனுக்களை வாபஸ் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications