அரசியலில் தான் எதிரி.. பார்த்ததுமே தோளில் தட்டிக்கொடுத்த சித்தராமையா! அரவணைத்த பொம்மை!நெகிழ்ச்சி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவையொருவர் கடுமையாக தாக்கி பேசி வரும் நிலையில் இன்று திடீரென எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் ஒன்றாக சந்தித்து கொண்டனர். இந்த வேளையில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம்விசாரித்து நடந்து கொண்ட விதம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதேபோல் எப்படியாவது தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணையில் அமர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

இன்னும் தேர்தலுக்கு 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் மேலிட தலைவர்கள், கர்நாடகா தலைவர்கள் என அனைவரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பம்பரமாக சுற்றி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் பல்வேறு இடங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாஜகவில் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட ஏராளமானவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பிற தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று பிரசாரத்துக்கு செல்வதற்காக முதல்வர் பசவராஜ் பொம்மை பெலகாவி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இருந்தனர். இதையடுத்து 3 பேரும் சந்தித்து பேசி கொண்டனர். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இந்த தலைவர்கள் பார்த்தவுடன் கட்சி பாகுபாடுகளை மறந்து நலம் விசாரித்து கொண்டது அனைவரையும் ஈர்த்தது.

குறிப்பாக சித்தராமையா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரின் செயல்பாடு அனைவரும் கவர்ந்தது. அதாவது பசவராஜ் பொம்மையை பார்த்த சித்தராமையா அவரிடம் கைக்குலுக்கி நலம் விசாரித்து கொண்டார். அதற்கு பசவராஜ் பொம்மை பதிலளித்ததோடு, அவரும் சித்தராமையாவிடம் நலம் விசாரித்தார். சித்தராமையா பதில் அளித்துவிட்டு பசவராஜ் பொம்மையின்து தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு சிரித்தபடி புறப்பட்டார்.
இதையடுத்து பின்தொடர்ந்து சென்ற பசவராஜ் பொம்மை, சித்தராமையாவின் முதுகில் கை வைத்து அரவணைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது இருவரும் வேடிக்கையாய பேசி சிரித்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications