பாஜக கோட்டையைத் தகர்க்கும் ‘கை’.. இந்த ஏரியாக்களில் காங்கிரஸ் ‘கெத்து’.. ஒரே தென்மாநிலமும் போச்சா?
பெங்களூர் : கர்நாடகாவில் பாஜக வலிமையாக இருந்த மும்பை கர்நாடகா, மத்திய கர்நாடகா, கடலோர கர்நாடகா பகுதிகளைத் தகர்த்து சீட்களைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ். கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என ஏபிபி - சி வோட்டர் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று ஏபிபி - சி வோட்டர் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 115-127 இடங்களும், பாஜகவுக்கு 68-80 இடங்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 23-35 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரே தென் மாநிலத்திலும்
பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென் மாநிலம் கர்நாடகா தான். ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளில் உண்மையானால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும். பாஜக, தாங்கள் ஆளும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவிலும் ஆட்சியைப் பறிகொடுக்கும். கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 104 சீட்களை வென்றிருந்த நிலையில், தற்போது 68 முதல் 80 சீட் வரையே கிடைக்க வாய்ப்புள்ளது என ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பகுதி வாரியாக
கர்நாடகாவின் நகர்ப்புறப் பகுதியான பெங்களூர் கர்நாடகாவில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 11-15 இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 15-19 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இங்கு 17 இடங்களையும் பாஜக 11 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. அதனால், இந்த முறையும் இங்கு பெரிய அளவில் மாற்றங்கள் நிகழாது என்கிறது ஏபிபி கணிப்பு.

ஜேடிஎஸ் - மாஸ்
பழைய மைசூரு பகுதிகளில் மொத்தமுள்ள 55 சீட்களில் காங்கிரஸ் கட்சி 24-28 இடங்களைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக 1-5 இடங்களைக் கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் கட்சிக்கு 26-27 இடங்கள் கிடைக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான தேவேகவுடா சார்ந்த வொக்கலிகர் சமூகத்தவர் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்கு ஜேடிஎஸ் குறிப்பிடத்தக்க சீட்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய கர்நாடகா
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெறும் என்று ஏபிபி - சிவோட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது. மத்திய கர்நாடகத்தில் காங்கிரஸ் 18-22 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 35 தொகுதிகளில் கடந்த 2018 தேர்தலில் 24 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 2023 ஆம் ஆண்டில், ஏபிபி கருத்துக்கணிப்பின்படி, பாஜக 12-16 இடங்களில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 2 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 சதவீத வாக்குகளைப் பெற்று 18-22 இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர கர்நாடகா
கடலோர கர்நாடகாவில் பாஜக 46% வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸ் 41% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 6% வரை ஜேடிஎஸ் பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மிகச்சிறிய பகுதியான கடலோர கர்நாடகாவில் மொத்தம் 21 சீட்கள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் 18 இடங்களை பாஜக வென்றிருந்தது. ஆனால் தற்போது பாஜக 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களைக் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

மும்பை கர்நாடகா
மொத்தமாக 50 தொகுதிகளைக் கொண்டுள்ள மும்பை கர்நாடகத்தில் காங்கிரஸ் 25-29 இடங்களையும், பாஜக 21-25 இடங்களையும் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை கர்நாடகாவில், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தலா 43% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2018 தேர்தலில் இப்பகுதியில் காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 30 இடங்களையும் வென்றிருந்தது.

ஹைதராபாத் கர்நாடகா
ஹைதராபாத் கர்நாடகாவில் மொத்தமுள்ள 31 இடங்களில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 10 இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்-கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக முறையே 44% மற்றும் 37% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications