பாஜகவே வேண்டாம்.. கர்நாடகாவில் ஓட்டம் பிடிக்கும் மாஜி துணை முதல்வர் டூ அமைச்சர் வரை.. என்னாச்சி?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்து ஓய்வு முடிவை அறிவிப்பதோடு, மாற்று கட்சியில் இணையவும் தயாராகி வருகின்றன. இதுதான் தற்போது அங்கு ஹாட் டாபிக்காக உள்ள நிலையில் பாஜக முன்னாள் துணை முதல்வர் முதல் அமைச்சர் வரையிலானவர்கள் பாஜகவுக்கு முழுக்கு போட தொடங்கி உள்ளனர். அவர்கள் யார்? எதற்காக இப்படி செய்தனர்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகாவில் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் நேற்று பாஜகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் ஹாவேரி மாவட்டம் ஷிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். மாறாக பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் கட்சியில் 52 புதிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் வயது முதிர்ந்த மற்றும் வெற்றி வாய்ப்பு குறைவானவர்களை பாஜக மேலிடம் ஓரம்கட்டியுள்ளது. இதனால் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
மேலும் பாஜகவின் மூத்த தலைவரான கேஎஸ் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் குருபா சமுதாயத்தின் முக்கிய தலைவராக உள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் முதல் விக்கெட்டாக லட்சுமண் சவதி உள்ளார். இவர் பெலகாவி மாவட்டத்தில் முக்கியமான தலைவர். கடந்த சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டம் அதானியில் தோல்வியடைந்தாலும் கூட கடந்த 2019ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியோடு துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். எம்எல்சியாக இவர் தொடர்ந்து வந்தார்.
வரும் தேர்தலில் லட்சுமண் சவதி அதானியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியை கவிழ்த்து பாஜகவில் இணைந்து மீண்டும் அதானி எம்எல்ஏவான மகேஷ் குமட்டள்ளிக்கு தற்போது பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் லட்சுமண் சவதி விரக்தியடைந்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது 2வது விக்கெட் விழுந்துள்ளது. அதாவது தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சராக இருந்த எஸ் அங்காராவும் பாஜக மேலிடம் மீது கோபமாக உள்ளார். 6 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற எஸ் அங்காராவுக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தான் எஸ் அங்காரா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‛‛சுள்ளியா தொகுதியில் என் பெயர் விடுபட்டது ஏற்கனவே திட்டமிட்ட முடிவாக உள்ளது என நினைக்கிறேன். கட்சி என்னை நடத்திய விதம் வேதனையளிக்கிறது. நான் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக எந்த லாபியும் நடத்தவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் சார்பான அதேநேரத்தில் நியாயமான அரசியலை செய்துள்ளேன். நான் கட்சிக்கு என்ன அநீதி இழைத்தேன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். தேர்தல் பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். இனி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை'' என விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications