வேலையை காட்டிய கர்நாடகா.. தமிழர் உயிர் என்றால் இளக்காரமா? வெடிக்கும் பிரச்சனை!
பெங்களூர்: வழிதவறி வனப்பகுதிக்கு சென்ற மாட்டை தேடிச் சென்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவசாயிகளை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி நீருக்காக கர்நாடகாவை நாம் எதிர்பார்த்து இருப்பதால், தமிழர்களையும்.. தமிழ்நாட்டையும் கர்நாடகா மிகவும் மோசமாக பார்க்கிறது. இது பல விஷயங்களில் நிரூபணமாகியிருக்கிறது. இப்போது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இன்னொருமுறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் பகுதியில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சுதந்திர தினமான ஆக.15 அன்று அதிகாலை நேரத்தில் வனத்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மான் வேட்டையாடி, அதை சமைக்க ஒரு கும்பல் முயன்றதாகவும், வனத்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்றபோது.. நாட்டு துப்பாக்கியால் தாக்க முயன்றதாகவும்.. தற்காப்புக்காக வனத்துறையினர் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர் என்றும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும குமார் ஆகியோர், வனப்பகுதியில் வழிதவறி சென்ற மாடுகளை தேடி சென்றவர்கள். அவர்களை வனத்துறையினர் திட்டமிட்டு கொலை செய்திருக்கின்றனர் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டிருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள். கர்நாடகாவில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள். அதனால்தான் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.
கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகுந்த நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது வனத்துறை அலுவலகத்தை மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
