தமிழர்களுக்கு ஆதரவாக வாட்டாள் நாகராஜ் .. டிகே சிவக்குமார் ராஜினாமா செய்யணும்.. 3 பேர் என்கவுண்ட்டரில் ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை வனத்துறையினர் சுட்டு கொன்றனர். இந்த விவகாரத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். முதல்வர் டிகே சிவக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கன்னட சங்கங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கொந்தளித்துள்ளார்.

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். மான் வேட்டையாடியதாக கூறி வனத்துறையினர் 3 பேரை சுட்டுக் கொன்றனர்.
இதில் தொமியார்பாளையா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகியோர் பலியாகினர். அதோடு மஹிமா தாஸ் என்பவர் தப்பினார். இறந்த 3 பேரும் தமிழர்கள். இதனால் இந்த விவகாரம் கர்நாடகா - தமிழகம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொன்றதற்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பாமக, கம்யூனிஸ்ட்டுகள் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த வனத்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் கர்நாடக முதல்வர் கண்டுக்கொள்ளவில்லை. கர்நாடகா விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தலையிடக்கூடாது என்று திமிராக பேசினார்.
இந்நிலையில் தான் 3 பேரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்கு பொறுப்பேற்று டிகே சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி உடனடியாக டிகே சிவக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இதுபற்றி வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:
''என்கவுண்ட்டர்.. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் உடனடியாக முதல்வர் (டிகே சிவக்குமார்) ராஜினாமா செய்ய வேண்டும். அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டு கொல்வது தான் என்கவுண்ட்டர். எதற்காக செய்தீர்கள்? அதற்கான நோக்கம் என்ன? எத்தனை முறை துப்பாக்கியால் சுட்டீர்கள்? என்பது பற்றி விசாரிக்க வேண்டும். துப்பாக்கியால் சுட்டவர்களை இதுவரை கைது செய்யவில்லை. துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
வெறும் கைதோடு நிறுத்த கூடாது. கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். அந்த தொகுதியின் எம்எல்ஏ பிச்சை கொடுப்பது போல் ரூ.5 லட்சம் இழப்பீடு கொடுத்துள்ளார். அந்த எம்எல்ஏவை முதலில் ஹனூர் தொகுதியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இப்படியான எம்எல்ஏ நம் மாநிலத்துக்கு தேவையில்லை. என்கவுண்ட்டர் என்பது ரொம்ப கெட்டது. அது ஆபத்தானது. என்கவுண்ட்டர் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. மாநிலத்தில் நடக்கும் ஆட்சி மிலிட்டரி ஆட்சியாகவும், ஹிட்லர் ஆட்சியாகவும் உள்ளது. உடனடியாக டிகே சிவக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று கொந்தளித்துள்ளார்.
இப்படி கருத்து தெரிவித்துள்ள வாட்டாள் நாகராஜ் பெங்களூரில் வசித்து வந்தாலும், அவருக்கும் துப்பாக்கிச்சூடு நடந்த வனப்பகுதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் துப்பாக்கிச்சூடு நடந்த மாவட்டம் சாம்ராஜ் நகர் மாவட்டமாகும். வாட்டாள் நாகராஜ் சாம்ராஜ் நகர் சட்டசபை தொகுதியில் தான் 1989ல் சுயேச்சையாகவும், 1994 மற்றும் 2004ம் ஆண்டில் தனது கன்னட சலுவலி வாட்டாள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பொதுவாக வாட்டாள் நாகராஜ் காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் தற்போது 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட விஷயத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாருக்கு எதிராக திரும்பி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications
