வறண்டு போன பெங்களூர்.. தண்ணீருக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் மக்கள்! ஆக்ஷனில் இறங்கிய கர்நாடக அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிலைமையை சீராக்க அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
ஜில்லென்ற காலநிலைக்காக அறியப்பட்ட பெங்களூர் நகரம், தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது.
இது குறித்து பெங்களூர் மக்கள் கூறுகையில், "வழக்கமாக ரூ.500 கொடுத்தால் 5000 லிட்டர் தண்ணீர் கிடக்கும். ஆனால் இப்போது இதன் விலை ரூ.2000 ஆக உயர்ந்திருக்கிறது. ரூ.1500க்கு பேரம் பேசினால் 2-3 நாட்கள் தாமதமாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீர் அடிப்படை தேவை எனவே அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து நாங்கள் தண்ணீரை வாங்கி வருகிறோம். கோடைக்காலம் இன்னும் உச்சம் தொடவில்லை. ஏப்ரல், மே மாதங்களில் இதே நிலை நீடித்தால் எங்களை போன்ற பலரும் தண்ணீரை வாங்க முடியாமல் நகரை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்" என்று கூறியுள்ளனர்.
விலை அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது சவாலாக இருக்கிறது. எனவே மாநில அரசு ஒட்டுமொத்த தண்ணீர் விநியோகத்தையும் கையில் எடுத்திருக்கிறது. இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் கூறுகையில்,
"தனியார் டேங்கர்கள், போர்வெல்கள் மற்றும் பாசனக் கிணறுகளை மாநில அரசு கட்டுப்பாட்டில் எடுக்கும். தண்ணீர் நெருக்கடியை சீராக்க, நான் பொறுப்பேற்கிறேன். அனைத்து மக்களுக்கும் தண்ணீர் சென்று சேர்வதை நான் உறுதி செய்கிறேன். தண்ணீர் விற்பனை நிறுவனங்களின் சுரண்டல் ஒழிக்கப்படும்" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது கையோடு, கர்நாடகா முழுவதும் உள்ள தண்ணீர் டேங்கர் உரிமையாளர்கள் தங்களின் டேங்கர் லாரி எண்ணிக்கை எத்தனை? கைவசம் வைத்துள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை எவ்வளவு? போன்ற விவரங்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 7ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால், அவர்களின் டேங்கர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். காலக்கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பெங்களூரு நகரில் மொத்தம் உள்ள 3,500 தண்ணீர் டேங்கர்களில், 10 சதவீதம் அதாவது 219 டேங்கர்கள் மட்டுமே அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகத்தை சீர்படுத்த மாவட்டம் தோறும் ரூ.854 கோடியும், போர்வெல்களுக்காக ரூ.70 கோடியையும் கர்நாடக அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications