முஸ்லீம்கள் வாழும் பகுதி பாகிஸ்தானா? வாயை விட்ட நீதிபதி.. உச்சநீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு மன்னிப்பு
பெங்களூர்: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பேசியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்ட நிலையில், நீதிபதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
நீதிபதிகளின் தீர்ப்புகள் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த காலம் போய்.. இப்போது அவர்களின் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன், சமீபத்தில் வழக்கறிஞர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், "பாவம் புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன். உங்களால் நான் தவறாக வழி நடத்தப்பட்டால், தவறான தீர்ப்பை நான் வழங்கினால் என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்" என்று கூறியிருந்தார்.

இந்தியா அடிப்படையில் மதச்சார்பற்ற சோசலிச குடியரசு நாடு. நம்முடைய அரசியலமைப்பு சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால், இக்குடியரசின் பிரதான தூணாக உள்ள நீதி துறையிலிருந்து பாவம், புண்ணியம் என்கிற கருத்து வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாது என விவாதம் வெடித்து கிளம்பியது.
அதேபோல, கரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதியில், எச்சில் இலைகளில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்யும் வழக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதன், இதற்கான காரணங்களாக பலவற்றை குறிப்பிட்டிருந்தார். இதில் "இது தனக்கு ஆன்மிக பலத்தைத் தரும் என பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே தடை நீக்கப்படுகிறது" என்று அவர் கூறியிருந்ததும் விவாதத்திற்கு வழிவகுத்திருந்தது.
தமிழ்நாட்டில்தான் இப்படியா? என்று கேட்டால்.. மற்ற மாநிலங்களிலும் பல நீதிபதிகளின் கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கு ஒன்றில் கூறியிருந்த கருத்து உச்சநீதிமன்றம் வரை பஞ்சாயத்தை கூட்டியுள்ளது.
நீதிபதி பேசியது என்ன?: "மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள், ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாவிலும் 10 பேர் உள்ளனர். கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு செல்லும் மைசூர் மேம்பாலம் இந்தியாவில் இல்லை. அது பாகிஸ்தானில் இருக்கிறது" என்று கூறியிருந்தார். இந்த கருத்தை கேட்டு அதிருப்தியடைந்த உச்சநீதிமன்றம், தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இது குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, "கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் கவனித்து வரும் இக்காலத்தில், நீதித்துறையை சேர்ந்தவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தனர்.
இப்படியாக பஞ்சாயத்து பெரியதாக வெடித்த நிலையில், கர்நாடக நீதிபதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். "நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்ப டவில்லை. ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
என்னதான் நீதிபதி மன்னிப்பு கேட்டிருந்தாலும், நீதிபதிகளின் கருத்துக்கள் குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் ஒரு வரைமுறையை வகுக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications