பெங்களூரில் குட்கா, பான் மசாலா.. இதெல்லாம் கிடைக்காது! கர்நாடகா முழுவதும் ஒரு வருஷத்துக்கு தடை
பெங்களூர்: கர்நாடகாவில் நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த போதைப்பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்பனை செய்யவும் மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தடை உத்தரவு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் அடைக்கப்படாத இரண்டு வகையான போதைப்பொருட்களுக்கும் பொருந்தும். மேலும் தனித்தனியாக விற்கப்பட்டு, பின்னர் நுகர்வோரால் ஒன்றாக கலந்து பயன்படுத்தப்படும் புகையிலை மற்றும் நிகோடின் தயாரிப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொத சுகாதார நலன் கருதி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006ன் கீழ், உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிகாரித்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் புகையிலை பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.. போதையில்லா கர்நாடகா உருவாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடையை மீறி யாராவது குட்கா, பான் மசாலா தயாரிப்பில் ஈடுபட்டால், விற்பனை செய்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். எனவே போதையற்ற கர்நடகாவை உருவாக்க போலீசாருக்கு இது பற்றி தகவல்கள் கிடைத்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும், கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதற்கான தடை அமலில் இருக்கிறது. இருப்பினும் பல்வேறு வழிகளில் முறைகேடாக தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
