கரூர் கூட்டநெரிசல் பற்றி நாங்க பேசலைல.. நீங்களும் என்கவுண்டர் விஷயத்தை கண்டுக்காதீங்க.. கர்நாடக அமைச்சர் பகீர்
பெங்களூர்: தமிழகத்தில் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அது பற்றி நாங்கள் எதாவது பேசினோமா? துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை அது எங்கள் மாநில விவகாரம். எந்த மதம், எந்த சமூகம், தமிழர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் கன்னடர்கள்தான். நாங்கள் பார்த்துக்கொள்வோம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசினார்.
கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. சிபிஐ விசாரணை செய்ய வேண்டும், இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

கரூர் கூட்டநெரிசல் பற்றி நாங்க பேசினோமா?
தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து தமிழ்நாடு தலையிடுவது தேவையில்லாத வேலை.. எங்கள் மாநிலத்தை பாதுகாத்துக்கொள்ள எங்களுக்கு தெரியும் என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இந்த விவகாரம் பற்றி நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் இதே கருத்தை முன்வைத்து இருக்கிறார். அதேபோல கரூர் சம்பவத்தையும் இழுத்து பேசியிருக்கிறார். ராமலிங்க ரெட்டி பேசியதாவது:-
இது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட விவகாரம். அவர்கள் தங்கள் வேலையை பார்க்கட்டும். அவர்கள் ஏன் எங்கள் விவகாரங்களில் தலையிடுகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதுபற்றி நாங்கள் பேசவில்லை. துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை அது எங்கள் மாநில விவகாரம்.
எந்த மதம், எந்த சமூகம், தமிழர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் கன்னடர்கள்தான். பல ஆண்டுகளாக அவர்கள் கர்நாடகாவில்தான் இருக்கிறார்கள். விசாரணை நடைபெற்று வருகிறது. 21,22 ஆம் தேதிக்குள் மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை வந்துவிடும். ஏதேனும் தவறு நடந்து இருந்தால் எங்கள் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்றார். கர்நாடகாவில் வனத்துறையினர் நடத்த்திய என்கவுண்டரையும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையும் கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழர்கள் சுட்டுக்கொலை
சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக தமிழத்தை பூர்விகமாக கொண்ட அந்தோணிசாமி என்ற பெரியநாயகம், ஜான் ரோஸ் பீட்டர் என்ற யாகூப், சவேரியப்பன் ஆகிய மூன்று பேரை வனத்துறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக டிகே சிவக்குமார் நேற்று பேசும் போது, தமிழகம் தலையிடக்கூடாது என விதண்டாவாதமாக பேசியிருந்தார். டிகே சிவக்குமார் கூறியதாவது:- "தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் நான் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்குரிய பிரச்சினைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தை பாதுகாக்க எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. எல்லா விஷயங்கள் குறித்தும் நான் கருத்து கூற முடியாது. இது பொதுவான பிரச்சினை" என்று கூறியிருந்த நிலையில், தற்போது ராமலிங்க ரெட்டியும் அதே கருத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
