கர்நாடகாவில் 2 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கம்.. 6 ஆண்டு அதிரடி சஸ்பெண்ட் ஏன்?
பெங்களூர்: கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி எம்எல்ஏக்கள் சிவராம் ஹெப்பர், எஸ்டி சோமசேகர் ஆகியோர் 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு மொத்தம் 64 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக மாநில தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளார்.

பாஜகவில் மூத்த எம்எல்ஏக்களாக எஸ்டி சோமசேகர், சிவராம் ஹெப்பர் ஆகியோர் இருந்து வந்தனர். இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றவர்கள்.
அதில் எஸ்டி சோமசேகர் பெங்களூர் யஷ்வந்தபுரா தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அதேபோல் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக சிவராம் ஹெப்பார் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கட்சி விதிகளை மீறி செயல்பட்டததால் 6 ஆண்டு பாஜகவில் இருந்து நீக்கி உள்ளதாக பாஜகவின் மத்திய ஒழுங்க நடவடிக்கை குழுவின் செயலாளர் ஓம் பதாக் உத்தவு பிறப்பித்துள்ளார்.
இவர்கள் 2 பேரும் கர்நாடகாவில் புயலை கிளப்பிய எம்எல்ஏக்கள் ஆவார்கள். கடந்த 2018ம் ஆண்டில் கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமி (இப்போது மத்திய அமைச்சர்)முதல்வராக இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் 15 எம்எல்ஏக்கள் கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவினர்.
அதில் எஸ்டி சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பார் ஆகியோர் முக்கியமானவர்கள். அதன்பிறகு இருவரும் பாஜக சார்பில் 2019ல் தங்கள் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்பிறகு கடந்த 2023சட்டசபை தேர்தலில் எஸ்டி சோமசேகர் யஷ்வந்தபுரா தொகுதியிலும், சிவராம் ஹெப்பார் எல்லாப்புரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது கட்சியில் இருந்து 6 ஆண்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் 2 பேரும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications