உணவு டெலிவரி வேலை பார்த்தபடி.. பெங்களூரில் பதுங்கியிருந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்! அதிரடி கைது
பெங்களூர்: கர்நாடகாவில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே எல்லைப் பகுதியில் மிகவும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவத் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இதை எல்லையைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள்
இதனிடையே நமது நாட்டிலும் கூட பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் தான் பீகாரில் பிரதமரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், நுபூர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்ட உதய்பூர் டெய்லர் கொலை வழக்கிலும் கூட பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதாகவே தேசியப் பாதுகாப்பு முகமை விசாரணையில் இறங்கி உள்ளது.

கர்நாடகா
இதனிடையே இப்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஸ்கர்-இ-தைபா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அக்தர் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் (அக்தர் உசேன், மொகமது தக்வீர், இர்பான் நசீர், தலிப்) அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு ரகசியமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

ரகசிய தகவல்
அவர்கள் கர்நாடக தலைநகர் பெங்களூரின் திலக் நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி உள்ளனர். மேலும், இவர்கள் அப்பகுதியில் உணவு டெலிவரி வேலையைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பயங்கரவாதிகள் குறித்து முதலில் அசாம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பெங்களூரில் தஞ்சம் புகுந்த நிலையில், பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை அவர்கள் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு பகிர்ந்துள்ளனர்.

கண்காணிப்பு
இந்த ரகசியத் தகவலின் பெயரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளைக் குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். அப்போது தான் பெங்களூர் திலக் நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மூன்றாவது தளத்தில் அவர்கள் ரூம் எடுத்துத் தங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அறையில் மொத்தம் 5 பேர் தங்கி இருந்து உள்ளனர். அவர்களின் செயல்பாடுகளை போலீசார் கடந்த ஒரு வாரமாகவே கண்காணித்து வந்துள்ளனர்.

கைது
இதனிடையே 30க்கும் மேற்பட்ட பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு திலக் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அக்தர் உசேன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஐந்து பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அக்தர் உசேன், அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளைத் தவிர யாரிடமும் பேச மாட்டார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications