வாக்காளர் பட்டியலில் முறைகேடு! முஸ்லிம் பெயர்களை நீக்க போலி பார்ம்-7.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் போது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்க முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், முன்பே அச்சிடப்பட்ட போலி 'பார்ம்-7' விண்ணப்பங்கள் மூலமாக முஸ்லிம் வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Karnataka Voter List Scam

'பார்ம்-7' என்றால் என்ன?

தேர்தல் விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயர் தவறாக இருந்தாலோ, அல்லது அவர் இறந்துவிட்டாலோ, வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாலோ அவரது பெயரை நீக்கக் கோரி அளிக்கப்படும் படிவமே 'பார்ம்-7' ஆகும். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் உயிருடன் இருக்கும் வாக்காளர்களை "இங்கு வசிக்கவில்லை" எனக் கூறி நீக்க இந்த படிவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டு முகவருக்கே நேர்ந்த அதிர்ச்சி

பெலகாவி வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 196-வது வாக்குச்சாவடியான வீரபத்ரா உருது மாதிரிப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக வாக்குச்சாவடி நிலை முகவராக (BLA) பணியாற்றி வருபவர் மீர்சாப் சனதி. இவர் அதே பள்ளியின் தலைவராகவும் உள்ளார்.

கடந்த வாரம் பள்ளிக்குச் சென்ற அவர், அங்கு சுமார் 380 பார்ம்-7 விண்ணப்பங்கள் குவிந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். காரணம், அந்தப் பட்டியலில் அவருடைய பெயர், அவரது சகோதரர் பெயர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்தன. தலைமுறையாக அங்கேயே வசித்து வரும் தங்களது பெயர்களை யாரோ திட்டமிட்டு நீக்க மனு அளித்திருப்பது அவருக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.

போலி அதிகாரிகள் கொடுத்த அழுத்தம்: வாக்குச்சாவடிகளில் நடந்தது என்ன?

பெலகாவி வடக்கு தொகுதியில் உள்ள வீரபத்ரா நகரின் நான்கு வாக்குச்சாவடிகள் (பகுதி 194, 195, 196, 199) மற்றும் செட்டிகல்லியில் உள்ள அரசு கன்னட உயர் தொடக்கப் பள்ளியின் இரண்டு வாக்குச்சாவடிகள் (பகுதி 209, 210) என மொத்தம் ஆறு வாக்குச்சாவடிகளில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தெரிவித்த தகவல்படி:

தங்களை பெலகாவி மாநகராட்சி ஊழியர்கள் என்று கூறிக்கொண்ட இரு நபர்கள் கட்டுக்கட்டாக பார்ம்-7 விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஆச்சரியப்படும் வகையில் முன்பே கணினியில் அச்சிடப்பட்டு தயாராக இருந்தன. அவற்றில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டு அச்சிடப்பட்டிருந்தன.

ஆனால், யார் ஆட்சேபனை தெரிவிக்கிறார்களோ (மனுதாரர்) அவர்களின் பெயர்கள் மட்டும் கையால் அவசர அவசரமாக எழுதப்பட்டிருந்தன அல்லது காலியாக விடப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பங்களில் உடனே கையெழுத்துப் போட்டுத் திருப்பித் தருமாறு அந்த மர்ம நபர்கள் அலுவலர்களை வற்புறுத்தியுள்ளனர்.

அதிகாரியின் பெயரைப் பயன்படுத்தி போலி தொலைபேசி அழைப்பு

அங்குள்ள அலுவலர்கள் பலர், "இவர்கள் பல ஆண்டுகளாக எங்கள் கண் முன்னே இதே பகுதியில் வசித்து வருகிறார்கள்; அவர்களை எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே படிவங்களில் கையெழுத்திட முடியாது" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

உடனே அந்த மர்ம நபர்கள் தொலைபேசியில் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசினர். எதிர்முனையில் பேசிய நபர், தன்னை தேர்தல் பதிவு அதிகாரி (ERO) உதயகுமார் பசவந்தப்பா தலவார் என்று கூறிக்கொண்டு, "உடனே அந்தப் படிவங்களில் கையெழுத்துப் போடுங்கள்" என அலுவலர்களை மிரட்டும் தொனியில் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்தல் அதிகாரி தலவார் அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதும், மர்ம நபர்கள் அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றியதும் தெரியவந்தது. இதற்கிடையே, சில அலுவலர்கள் அச்சம் காரணமாக வேறு வழியின்றி கையெழுத்திட்டுள்ளனர்; மற்ற அலுவலர்கள் தங்கள் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

விசாரணையில் சிக்கிய திடுக்கிடும் உண்மைகள்

மதிய உணவை முடித்துவிட்டுத் திரும்பிய மீர்சாப் சனதி மற்றும் பொதுமக்கள் அந்த இரு நபர்களையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். பெலகாவி வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் சேத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். அவர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்ததால், அவரது மகனும் காங்கிரஸ் நிர்வாகியுமான அமான் சேத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

விசாரணையில் அந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்:

முதலில் தங்களை மாநகராட்சி ஊழியர்கள் என்றவர்கள், தொடர்ந்து கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதும் தாங்கள் டாக்டர் ரவி பாட்டீல் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்று மாற்றிப் பேசினர். மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களை போனில் அழைத்து விசாரித்தபோது மற்றொரு உண்மை வெளியானது. உதாரணமாக, சசிகாந்த் ஜாதவ் என்பவரின் பெயரில் பல விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவரிடம் பேசியபோது, "படிவத்தில் இருப்பது எனது பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள்தான். ஆனால், நான் யாருக்கும் எதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லை; அந்தப் படிவங்களை நான் நிரப்பவே இல்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் மூலம் அடுத்தவர் விவரங்களைத் திருடி போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது உறுதியானது.

ஒரு வாக்குச்சாவடியில் பொதுமக்கள் உஷாரானதால் அந்தப் படிவங்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. ஆனால் மற்ற வாக்குச்சாவடிகளில் அவை ஏற்கனவே கைமாறிவிட்டன.

காலக்கெடு முடிந்தும் தொடரும் முறைகேடு

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த போதிலும், பால்கி போன்ற பகுதிகளில் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வ 'பார்ம்-10' அறிக்கையின்படி, செப்டம்பர் 24 முதல் 29 வரை மொத்தம் 1,131 நீக்கல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 1,123 விண்ணப்பங்கள் மொத்தமாக அளிக்கப்பட்டவை ஆகும். காலக்கெடுவுக்குப் பின் வந்த இந்த விண்ணப்பங்கள், அக்டோபர் 27-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைக்கும் நோக்கில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாக்காளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வி. அன்பு குமார் தரப்பில் உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கிடைக்கவில்லை. முறையான கள ஆய்வு இல்லாமல் எந்தவொரு உண்மையான வாக்காளரின் பெயரும் நீக்கப்படக் கூடாது என்றும், இந்த சதிக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+