கர்நாடகா vs கேரளா.. "இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்!" பினராயி விஜயனுக்கு டிகே சிவக்குமார் பதிலடி
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவகாரத்தில் கர்நாடகக் காங்கிரஸ் அரசுக்கும் கேரளாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாட்டை பினராயி விஜயன் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு கர்நாடகத் துணை முதல்வர் டிகே சிவக்குமார் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரில் உள்ள கோகிலு கிராமத்தின் வசீம் லே அவுட் மற்றும் ஃபகிர் காலனியில் உள்ள பல்வேறு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. பெங்களூரு திடக் கழிவு மேலாண்மை லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்ததாகச் சொல்லி, இந்தப் பகுதி இடித்து அகற்றப்பட்டது. வீடுகள் அனுமதியின்றிக் கட்டப்பட்டதாகவும், பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பினராயி விஜயன்
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை வைத்து அங்கு மிகப் பெரிய அரசியலே நடந்து வருகிறது என்று சொல்லலாம். காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "துரதிர்ஷ்டவசமாக, சங்க பரிவாரின் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை இப்போது கர்நாடகக் காங்கிரஸ் அரசு செயல்படுத்தப்படுகிறது. மிருகத்தனமான சக்தி ஆட்சி செய்யும்போது, அரசியலமைப்பு மதிப்புகள் பலியாகின்றன. இந்த நயவஞ்சகப் போக்கை எதிர்த்து தோற்கடிக்க அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.
கேரளா vs கர்நாடகா
கேரள முதல்வரின் விமர்சனத்தால் இந்த விவகாரம் இப்போது கேரளா vs கர்நாடகா என்பது போல மாறியுள்ளது. இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டார். நில அபகரிப்பு, அத்துமீறலை அரசு அனுமதிக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், அதேநேரம் உண்மையிலேயே இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவும் என்றார். கர்நாடக துணை முதல்வரான சிவக்குமார், பெங்களூர் வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்த சிவக்குமார், இதனால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரிடம் அனுதாபம் காட்டுவதன் மூலம் விஜயன் இதை அரசியலாக்குவதாகச் சாடினார்.. கேரளாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் இடதுசாரிகள் தோற்றுவிடும் அஞ்சுவதாலேயே பினராயி விஜயன் இதுபோல பேசி வருவதாகவும் டிகே சிவக்குமார் சாடினார்.
டிகே சிவக்குமார் திட்டவட்டம்
இது தொடர்பாக டிகே சிவக்குமார் மேலும் பேசுகையில், "சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு திடக் கழிவு மேலாண்மைக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிலம் தான் இது. இங்குச் சமீப காலங்களில் தான் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. என்னிடம் இதைக் காட்டும் சாட்டிலைட் படங்கள் உள்ளன. ஒரே இரவில் பலர் இங்குக் குடியேறியுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருப்பதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால், சோதனை செய்ததில் அது பக்கத்தில் இருக்கும் முகவரியில் இருந்தது. இந்த நிலத்தில் யாருக்கும் வாக்காளர் அட்டையோ அல்லது எந்தவொரு ஆவணமோ இல்லை.
ஆக்கிரமிப்புகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிட்ட பிறகே அந்த இடங்கள் அகற்றப்பட்டன. குப்பை மறுசுழற்சி மையம் அருகே கட்டப்படும்போது, சுகாதாரக் காரணங்களுக்காக இவ்வளவு அருகில் வீடுகளை அனுமதிக்க முடியாது.
அரசியல் செய்ய வேண்டாம்
இந்த விவகாரத்தை வைத்து கேரளா முதல்வர் உட்படச் சிலர் அரசியல் செய்ய முயல்கிறார்கள். சிறுபான்மையினருக்கு அனுதாபத்தைக் காட்ட முயல்வது போலப் பேசி அரசியல் செய்கிறார், அவர் இதிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எங்கள் மாநிலத்தில் நடக்கும் பிரச்சினை.. இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அவரவர் அவரவர் வேலையைச் செய்வதே சரியாக இருக்கும்" என்றார்.
இது எங்க பிரச்சினை
இதனால் பாதிக்கப்பட்டு, வீட்டை இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு நிச்சயம் உதவும் எனத் துணை முதல்வர் டிகே சிவக்குமார் உறுதியளித்தார்.. அவர் மேலும், "பெங்களூரில் சட்டவிரோத வீடுகளைக் கட்டுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அரசு சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். இது குறித்து விவாதிக்க முதல்வர் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்தக் கூட்டத்திற்கு முன்பு, நான் தனிப்பட்ட முறையில் இங்கு வந்து என்ன பிரச்சினை என்று பார்க்க விரும்பினேன். இதில் உள்ள சிக்கல்களைச் சரி செய்வோம்.
சிலர் மக்களிடம் பணம் வசூலித்துக் கொண்டு அரசு நிலத்தில் வீடுகள் கட்ட அனுமதித்ததாகப் புகார்கள் எழுந்துள்ளது. அது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த நேரத்தில் யார் இதைச் செய்தது என்ற விவரத்தை வெளியிட முடியாது. விசாரணை முடிந்தவுடன் தேவையான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications