அதெப்படி ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என கூறலாம்? கர்நாடக அமைச்சருக்கு வக்கீல் சங்கம் நோட்டீஸ்
பெங்களூர்: ஹிஜாப் விவகாரத்தில் சீருடை விதிகள் மற்றும் உடைகள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு, அரசாணைகளுக்கு முரண்பாடாக கருத்து தெரிவித்துள்ளதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேசுக்கு வக்கீல்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சராக பிசி நாகேஷ் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மாநிலத்தில் எழுந்த ஹிஜாப் பிரச்சனையில் சீருடை முறையை பின்பற்றுவது தொடர்பான கர்நாடக அரசின் உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கறிஞர் சங்கம்
தற்போது கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் மார்ச் 28 ல் பேட்டியளித்தார். அப்போது, அவர் ‛‛எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படமாட்டார்கள்'' என கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளதாக வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களின் அமைப்பான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.

அமைச்சருக்கு நோட்டீஸ்
மேலும் இதுதொடர்பாக அமைச்சர் பிசி நாகேசுக்கு அந்த சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசில் கூறியுள்ளதாவது: கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவ-மாணவிகள் ஹிஜாப் உள்பட அனைத்து மத உடைகள் அணிந்து தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஈகோவை விட்டுவிட்டு தேர்வெழுதுங்கள் என மார்ச் 28 ல் கூறியுள்ளீர்கள்.

அரசாணைக்கு முரண்
இது அரசு அல்லது தனியார் பள்ளிகளால் நிர்ணயிக்கப்பட்ட சீருடைகளை அணிய வேண்டும் என மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு முரணானது. அதாவது பள்ளி அல்லது கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதித்தால் அந்த உடையுடன் மாணவிகள் தேர்வு எழுத முடியும். ஆனால் நீங்கள் எந்த தேர்வு கூடங்களிலும் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படமாட்டாது என கூறியுள்ளீர்கள்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன
மேலும் இந்த கருத்து கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் முரணானதாக உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு என்பது 2022 பிப்ரவரி 5ம் தேதியிட்ட அரசாணையை உறுதி செய்துள்ளது. இந்த அரசாணையானது அரசு அல்லது தனியார் பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட எந்த வகையிலான சீருடையை வேண்டுமானாலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பு என்பது வகுப்பறைக்குள் மட்டுமே வரையறைக்கப்பட்டுள்ளது. மாறாக வகுப்பறைக்கு வெளியே அவர்கள் விரும்பிய ஆடைகளை அணியலாம்.

கருத்தை திரும்ப பெற வேண்டும்
இதன்மூலம் பொறுப்பற்ற மற்றும் தவறான முறையில் அரசியலமைப்பு பிரமாணத்தை மீறுவதாகவும், தேவையற்ற விளைவுகளை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது. இதனால் கதக்கில் 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் உங்களது கருத்தை திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் அது கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு, அரசு உத்தரவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. மேலும் ஒரு தெளிவுப்படுத்துதலை வழங்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications