நச்.. 100% துல்லியம்.. 2018 கர்நாடக தேர்தலில் அப்படியே நிஜமான “அந்த” கருத்துக்கணிப்பு -எது தெரியுமா?
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை துல்லியமாக கணித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவை பார்ப்போம்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில் இன்று அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இதில் தனித்து போட்டியிட்டதால் கடந்த 2018 சட்டசபைத் தேர்தலை போன்றே இதிலும் மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முன் பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்று தெரிவித்தன.
சில ஊடகங்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவித்தன. இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது.
இதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை எடுத்து வெளியிட்டன. ஆனால், எல்லா கருத்துக்கணிப்பு முடிவுகளும் சரியாக அமைந்துவிடவில்லை. அந்த தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் அதில், துல்லியமான கருத்துக்கணிப்பு எது என்பதையும் விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் டைம்ஸ் நவ் - விஎம்ஆர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 90 - 103 தொகுதிகளிலும், பாஜக 80 - 93 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 31 - 39 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே ஆக்சிஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 106 - 118 தொகுதிகளிலும், பாஜக 80 - 93 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 31 - 39 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
நியூஸ் எக்ஸ் - சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 72 - 78 தொகுதிகளிலும், பாஜக 102 - 110 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 35 - 39 இடங்களிலும் வெல்லும் என்றும், இந்தியா டுடே - ஆக்சிஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 106 - 118 தொகுதிகளிலும், பாஜக 79 - 92 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 - 30 இடங்களிலும், இதர 1- 4 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கர்நாடகாவின் தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸ் 78 இடங்களிலும், பாஜக 104 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் இதர 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. அதன் அடிப்படையில் பார்க்கையில் வெற்றிகரமான துல்லியமான கருத்துக்கணிப்பு முடிவாக நியூஸ் எக்ஸ் - சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவையே பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications