பாஜகவுக்கு “டென்சன்”.. இந்து மதம் வேண்டாம்! தனிமதம் கோரும் லிங்காயத்து -கர்நாடகா தேர்தலில் நெருக்கடி
கர்நாடகாவில் லிங்காயத்து சமுதாயத்தினர் மீண்டும் தனி மத அந்தஸ்து கோரி முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் லிங்காயத்து சமுதாயத்தினர் மீண்டும் தனி மத அந்தஸ்து கோரி முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தி இருக்கின்றனர். தங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. எனவே இரண்டரை மாதங்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் ஆளும் பாஜகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

2018 கர்நாடகா தேர்தல்
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே பாஜகவின் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது.

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
இதன் காரணமாக எடியூரப்பா பதவியேற்ற முதல்நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக பதவி விலகுவதாக அறிவித்தார். மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதலமைச்சர் ஆனார். ஆனால், அடுத்த 2019 ஆண்டிலேயே கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கவர்ந்த பாஜக அவர்களை பதவி விலக செய்தது.

ஆட்சியை பிடித்த பாஜக
இதனால் ஜேடியு - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழக்க, எடியூரப்பா தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், மாநில பாஜகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக எடியூரப்பா பதவி விலகினார். பசவராஜ் பொம்மை அம்மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

உட்கட்சிப் பூசல்
இந்த நிலையில் விரைவில் சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கர்நாடக பாஜக மாநில நிர்வாகத்திற்குள் தொடர்ந்து உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் தற்போதைய மாநில பாஜக நிர்வாகத்துக்கு எதிராக உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. மாநில பாஜகவின் சங்கல்ப் யாத்திரை குறித்த அறிவிப்பில் எடியூரப்பாவின் பெயர் இடம்பெறவில்லை.

தனி மத கோரிக்கை
இதற்கிடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் லிங்காயத்து மடத்தின் சாமியாரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், லிங்காயத்து சமுதாயத்தினர் இந்து மதத்திலிருந்து தங்களை விடுவிடுத்து மீண்டும் தனி மத அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டே அவர்கள் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 20 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து உள்ளார்கள்.

எடியூரப்பாவுக்கு எதிராக மாநில பாஜக
கர்நாடகாவில் பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கும் சமுதாயமாக லிங்காயத்து உள்ளது. இந்த சமுதாயத்தை சேர்ந்தவரான எடியூரப்பா, முதலமைச்சராக இருந்தபோதே அவருக்கு எதிராக அம்மாநில அமைச்சர்கள், மூத்த பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். பசவராஜ் பொம்மை ஆட்சியின் கீழ் லிங்காயத்து மடத்தின் சாமியார்கள் கைது செய்யப்பட்டதால் அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications