"மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை".. மகளிர் உரிமைத்தொகை குறித்து பின்வாங்கும் தவெக
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மாநிலத்தின் நிதிநிலை சரியில்லை என்று பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். முன்னாள் அதிமுக நிர்வாகி வசந்த் சண்முகம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கமலி மற்றும் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்று, புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்கால அரசியல் திட்டங்களுக்கும் இந்த இணைப்பு முக்கியமானதாக கருதப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜிடம், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கூறப்பட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், கடந்த ஆட்சியில் ஏற்கனவே பயனடைந்து வந்த சிலருக்கு கடந்த மாதம் தொகை வழங்கப்பட்ட நிலையில், இதுவரை பெறாத பெண்களுக்கு எப்போது வழங்கப்படும் என்றும் செய்தியாளர்கள் கேட்டனர்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் சில நொடிகள் அமைதியாக இருந்த அமைச்சர் அருண்ராஜ், "தற்போது மாநிலத்தின் நிதிநிலை சரியாக இல்லை" என சூசகமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல, அன்னூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், முதலில் மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து நிலைமையை அறிந்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறினார்.
அமைச்சரின் இந்த பதில்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான அவரது கருத்து, மாநில அரசின் நிதிநிலை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே, மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் விரிவான விளக்கம் வெளியாகுமா என்பதையும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications