இந்தியா இல்லை... பாகிஸ்தானை சீரழிப்பது அதன் சொந்த ராணுவம் தான்! சிங்கப்பூர் முன்னாள் தூதர் அதிரடி
சிங்கப்பூர்: பாகிஸ்தான் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே நிலைமை மோசமாக தான் இருக்கிறது. தனது எல்லா பிரச்சனைகளுக்கும் இந்தியா தான் காரணம் என சொல்வதையும் பாகிஸ்தான் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. இதற்கிடையே பாகிஸ்தானின் பிரச்சினைக்கு இந்தியா காரணமில்லை.. மாறாக அவர்களின் சொந்த ராணுவம் தான் காரணம் என்ற உண்மையை முன்னாள் சிங்கப்பூர் தூதர் போட்டு உடைத்திருக்கிறார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தானின் பெயர் சர்வதேச அரங்கில் ரொம்பவே டேமேஜ் ஆகியிருக்கிறது. அதை சரி செய்யப் பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ஈரான் மோதலுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தியதன் மூலம் பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் தனது மதிப்பை உயர்த்த முயன்றது.

பாகிஸ்தான்
இருப்பினும், பாகிஸ்தான் தனது சொந்த நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்று சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹாரி கவுசிகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், "பாகிஸ்தான் தற்போது தோல்வியடைந்த நாடாக மாறும் விளிம்பில் உள்ளது. அந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை இந்தியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல. அதன் சொந்த அரசியல்வாதிகளும், ராணுவத்தின் ஆதிக்கமும்தான்" என்று வெளிப்படையாகக் கூறினார்.
அமெரிக்கா ஈரான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் முக்கியமான தூதராக இருந்து பேசிய பிலாஹாரி, "அமெரிக்காவின் பார்வையில் பாகிஸ்தானின் சர்வதேச மதிப்பு ஓரளவு உயர்ந்திருக்கலாம். இருப்பினும், அந்த வெற்றி பாகிஸ்தான் மக்களின் வயிற்றை நிரப்பாது. பாகிஸ்தானில் அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி மோசமாக இருக்கிறது" என்றார்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
பாகிஸ்தான் பொருளாதாரம் பல ஆண்டுகளாகவே மிக மோசமான நிலையில் இருக்கிறது. அவர்கள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் கடன் மற்றும் நிதி உதவிகளை நம்பியே இருக்கிறது. இன்னுமே கூட அவர்கள் பொருளாதாரம் மோசமாகவே இருக்கிறது. கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உலகின் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளது. அந்தளவுக்கு தான் அங்கு நிலைமை இருக்கிறது.
அமெரிக்கா
சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹாரி மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் இன்னும் முழுமையாக சரிந்து போகவில்லை. ஆனால் சர்வதேச பிரச்சினைகளில் தூதர்களாக இருந்து பெற்ற வெற்றிகள் அந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை மாற்றிவிடாது. இந்த ஒரே காரணத்திற்காக அமெரிக்காவும் பாகிஸ்தான் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்றும் கவுசிகன் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க அரசு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா விண்ணப்பங்களை முழுமையாக நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
சொந்த ராணுவம் தான் காரணம்!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் நிலவும் பிரச்சினை தான் பாகிஸ்தான் பிரச்சினைக்கு காரணமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எல்லா பிரச்சினைக்கும் இதையெல்லாம் காரணமாகச் சொல்ல முடியாது. அது வெறும் சாக்குப்போக்கு தான். பாகிஸ்தான் தனி நாடாக உருவான காலம் முதலே அங்கு நிர்வாகம் மோசமாக இருக்கிறது. அதன் அரசியல்வாதிகள் அனைவரும் நேரத்தை வீணடிப்பவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தானில் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதில் மாற்றமில்லை. பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணமே அந்நாட்டின் ராணுவம் தான்" என்றார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை அது சுதந்திரம் அடைந்த பிறகு கிட்டத்தட்ட பாதி காலம் அங்கு ராணுவ ஆட்சியே இருந்துள்ளது. மீதமுள்ள காலத்தில் தான் ஜனநாயக அரசுகள் இருந்தது. அப்போதும் கூட ராணுவத்திடமே செல்வாக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற நிர்வாக அமைப்பே இன்று பாகிஸ்தானை கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக பிலஹாரி கவுசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications