தாஜ்மஹால் உண்மையிலேயே சிவன் கோவில் தானா? மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட்
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் உண்மையில் 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோவிலாக இருந்தது என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து பதில் கோரியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் உள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக உள்ள இந்த தாஜ்மஹால் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. மறைந்த முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக இந்த தாஜ்மஹாலை கட்டினார்.

இந்நிலையில் தான் தாஜ்மஹாலை சுற்றி அவ்வப்போது சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. குறிப்பாக தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோவில் இருந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதற்கிடையே தான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹரி சங்கர் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அக்ரேஷ்வர் மகாதேவ் நக்நாதீஸ்வர் விராஜ்மான் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''தாஜ்மஹால் இருந்த இடத்தில் முதலில் சிவன் கோவில் இருந்தது. இது 'தேஜோ மஹாலயா' என்று அழைக்கப்பட்டது.
இந்த கோவில் 1155 முதல் 1156ம் ஆண்டில் ராஜா பரமர்தி தேவ் என்பவரால் கட்டப்பட்டது. இதனால் தாஜ்மஹாலை பார்வையிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். கட்டடக்கலை அம்சங்களை மட்டுமே சார்ந்து இல்லாமல் இது சிவனுக்கான கோவிலா? என்பதை தீர்மானிக்க இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நீதிபதி ரஞ்சன் அகர்வால் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது நீதிமன்றம் சார்பில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைப்பது பற்றி மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறையிடம் பதிலளிக்கும்படி கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தாஜ்மஹால் தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.













Click it and Unblock the Notifications