ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் வீடு கட்ட விடுவோம்! தவெகவினர் மிரட்டுறாங்க! சென்னை பெண் கண்ணீர் பேட்டி
சென்னை: "விஜய் ஐயா, எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து எங்களை மிரட்டுறாங்க" என்று கண்கலங்கியபடி சென்னை பெண் ஒருவர் தவெக நிர்வாகிகள் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வீடு கட்டுவதற்காக ரூ.50,000 தர வேண்டும் என கடந்த மூன்று, நான்கு நாட்களாக வந்து மிரட்டி வருகிறார்கள்.. என வேதனையுடன் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில், முதல்வர் விஜய் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாங்கள் புதிதாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். வீடு கட்டுவதற்கு எங்களுக்கு பணம் கொடுத்தால்தான் விடுவோம் என்று ராகுல் என்ற நபர் தவெகவில் இருப்பதாக கூறிக்கொண்டு எங்களிடம் பிரச்சினை செய்கிறார். கட்டுமான வேலை செய்பவர்களை மிரட்டுகிறார்கள்.

4 நாட்களாக வந்து தொல்லை கொடுக்குறாங்க
வட்டிக்கு வாங்கிதான் நான் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன். வட்ட செயலாளர் சொன்னார் ரூ.50 ஆயிரம் கொடு என்றால் நான் எங்கே போவது.. தினமும் வந்து தொல்லை செய்கிறார்கள். 3, 4 நாட்களாக வந்து தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். கூலிக்கு வைத்துதான் நான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். 1,000 ரூபாய், 1,300 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன். வேலையை நிறுத்தி நிறுத்தி சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
நான் எப்படி கொடுக்க முடியும்.. புதிதாக நிர்வாகியாக வந்து இருக்கிறார்களாம். அவர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டுமாம். வட்ட செயலாளர் என்று சொல்கிறார்கள். ஆனால் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் எங்க ஏரியா கிடையாது. பக்கத்து ஏரியாதான். அவர் ஏன் எங்களிடம் வந்து பணம் கேட்க வேண்டும். 3 நாளாக தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறார். இன்று யாரோ ஒரு போலீஸ்காரர் போன் செய்தார்.
விஜய் ஐயா, எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க..
அவரிடம் பேசும் போது ஸ்டேஷன் வர சொன்னார்கள். ஸ்டேஷனில் கேட்ட போது யாரும் புகார் கொடுக்கவில்லை என்று கூறினார். வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். அவுங்கள நம்பி மக்கள் இதற்குதான் ஓட்டு போட்டார்களா.. அவங்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கணுமா? ஒரு வருஷமாக பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. நான் வட்டிக்கு வாங்கிதான் வீடு கட்டி வருகிறேன்" என்றார்.
அந்த பெண்ணுடன் வந்த மூதாட்டியும் முதல்வர் விஜய்க்கு உருக்கமான கோரிக்கை வைத்தார். அவர் கூறுகையில், "விஜய் ஐயா, எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க" என்று கண்கலங்கியபடி பேசினார். பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, 'தூய்மையான ஆட்சியை கொடுப்பேன் என்று கூறி முதல்வர் விஜய் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அவரது கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தயவுதாட்சண்யம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.














Click it and Unblock the Notifications