கர்நாடகாவை ஸ்வீப் செய்யும் பாஜக கூட்டணி.. காங்கிரசுக்கு பெரிய ஷாக் தந்த கருத்து கணிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் கூட நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாநிலத்தை ஸ்வீப் செய்யும் என மாத்ரூ பூமி- பி மார்க் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிகள் செல்வாக்காக உள்ள இடங்களில் கூட காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
இதனால் வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட பாஜக -ஜேடிஎஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக + ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இருகட்டங்களாக லோக்சபா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கும் 2வது கட்டமாக 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் என்பது ஏப்ரல் 26ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் என்பது மே மாதம் 4ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா லோக்சபா தேர்தல் தொடர்பாக மாத்ருபூமி நியூஸ் - பி மார்க் (Mathrubhumi News- P MARQ) சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியை வழங்கி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் என்டிஏ எனும் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி 24 முதல் 27 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக கட்சியினர் உற்சாகமாகி உள்ளனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி 1 முதல் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி கடந்த 2019 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம், ரேஷனில் 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை காங்கிரஸ் நிறைவேற்றி உள்ளது.
இதனால் வரும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்க அதிக இடங்களை தருவார்கள் என அந்த கட்சி தலைவர்கள் நம்பும் நிலையில் இந்த கருத்து கணிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வென்றது. மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் , ஜேடிஎஸ் தலா ஒரு இடத்திலும் வென்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமார் தம்பி டிகே சுரேஷ், ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனான பிரஜ்வெல் ரேவண்ணாவும், மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications