"நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை
பெங்களூர்: இரவில் நீங்கள் தனியாக நிற்கிறீர்கள். பெண் ஒருவர் பதற்றத்தோடு வந்து 'அண்ணா செல்போன் தாங்களேன். ஒருவரிடம் பேசிவிட்டு தருகிறேன்' என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?.. கொடுத்து உதவுவீர்கள் அல்லவா? அப்படித்தான் தொழிலாளி ஒருவர்பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவி சிக்கலில் மாட்டி உள்ளார்.

சிக்கல் என்றால் சாதாரணமானது அல்ல. முதலில் அந்த தொழிலாளி செல்போன் உதவி கேட்ட பெண்ணை கொன்றுவிட்டதாக கொலைக்காரர் பட்டம் பெற்றார். பிறகு கொலையை ஒப்புக்கொள்ளும்படி உடலில் மின்சாரம் பாய்ச்சிய போலீசாரின் சித்ரவதையை அனுபவித்தார். இரண்டரை ஆண்டுகள் சிறையிலும் இருந்தார்.
இதில் நொந்துபோன தொழிலாளி தனது வக்கீலுடன் சேர்ந்து நிரபராதி என நிரூபிக்க போராடினார். 2 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் தான் இருக்கிறார். நான் கொலைக்காரன் இல்லை. நிரபராதி என்று நிரூபித்துள்ளார் அந்த தொழிலாளி. கேரளாவில் 'க்ரைம் த்ரில்லரையும்' மிஞ்சிய இந்த நிஜ சம்பவத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே ஹிரோடிபீடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜு. இவரது மகள் பெயர் மஞ்சு (வயது 36). இவருக்கும், நீலனகொப்பலு கிராமத்தை சேர்ந்த உறவினர் மஞ்சுநாத்துக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு மஞ்சு உடல்நலம் பாதிக்கப்பட்டார். தந்தை வீட்டிற்கு வந்தார். 2019 மே மாதம் திடீரென்று மஞ்சு மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ஜூலை மாதம் மஞ்சுவின் தந்தை நாகராஜு, பாண்டவபுரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் தேடிப்பார்த்தனர். அவரை பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் இந்த 'மிஸ்ஸிங்' வழக்கு 'பெண்டிங்'கில் இருந்தது. 2 ஆண்டுகள் கழித்து நாகராஜு மீண்டும் பாண்டபுரா போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில் ''எனது மகள் ராகிமுத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் செல்போனை கடைசியாக பயன்படுத்தி பேசியுள்ளார். அதன்பிறகு ராஜேஷ் அவரை ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள காவிரி ஆற்றில்தள்ளி கொலை செய்துள்ளார். இதனை ஆனந்த பத்மநாபா, குருகுமாரா ஆகியோர் என்னிடம் கூறினர்'' என பகீர் கிளப்பினார்.
போலீசார் ராஜேசை பிடித்து விசாரித்தனர். அப்போது ஒரு பெண் தன்னிடம் செல்போன் வாங்கி பேசியதை அவர் ஒப்புக்கொண்டார். ''பாண்டவபுரா பஸ் நிலையத்தில் நின்றபபோது ஒரு பெண் அவசர உதவியாக தன்னிடம் செல்போன் கேட்டார். நானும் கொடுத்தேன். அவர் ஒருவரிடம் பேசிவிட்டு செல்போனை மீண்டும் தந்துவிட்டு சென்றார். ஆனால் நான் அவரை கொல்லவில்லை'' என்று கூறினார்.
ஆனால் ராஜேஷ் தான் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 2024 ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
செய்யாத கொலைக்கு இரண்டரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்தது, அக்கம்பக்கத்தினர் அவரை கொலைக்காரர் என அழைத்தது உள்ளிட்டவற்றால் ராஜேஷ் நொந்துபோனார்.
இதுபற்றி தனது வக்கீல் நடேஷிடம் கூறினார். கவலைப்பட்டார். இதனால் ராஜேஷ் - வக்கீல் நடேஷ் ஆகியோர் அந்த பெண்ணின் பின்னணி பற்றி விசாரித்தனர். 2 ஆண்டுகளாக தொடர்ந்து மஞ்சு பற்றி துப்பு துலக்க முயன்றனர்.கடைசிாக கொலையானதாக கூறப்பட்ட பெண் மஞ்சு உயிருடன் இருப்பதும், அவர் தனது விருப்பப்படி நாகேந்திரா என்பவரை திருமணம் செய்து மண்டியா மாவட்டம் நாகமங்களாவில் வசித்து வருவது தெரியவந்தது.
இதுபற்றி ராஜேஷ் தரப்பில் பிண்டிகனவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மஞ்சுவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், போலீசாரிடம், ''என்னை யாரும் கொலை செய்யவில்லை. எனக்கு எனது தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்தார். இதனால் வீட்டை விட்டு வெளியேறினேன்.
நான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொண்டு ஓராண்டு தமிழகத்தில் கோவையில் வசித்தேன். இப்போது இங்கு வசித்து வருகிறேன். நான் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் வழக்கு பற்றியும், நான் வீட்டை விட்டு வெளியேறும்போது செல்போன் கொடுத்து உதவிய ராஜேஷ் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது'' என்றார்.
இதையடுத்து மஞ்சுவை போலீசார் பெண்கள் காப்பகத்தில் அடைத்தனர். இதனால் கொலையாளி என குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் நிம்மதியடைந்தார். அதேவேளையில் விசாரணை என்ற பெயரில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்ணீர் மல்க கூறி கவலையை பகிர்ந்தார்.
இதுபற்றி ராஜேஷ் கூறுகையில், ''நான் யாரையும் கொல்லவில்லை என்று போலீசாரிடம் பலமுறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கொலையை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். என்னை அடித்து துன்புறுத்தினர். உடலில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தனர். என்னுடைய சகோதரி மற்றும்அவரது கணவரை கைது செய்வதாக மிரட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர்.
இதற்கு முழு காரணம் அப்போதைய பாண்டவபுரா இன்ஸ்பெக்டர் பிரபாகர் (இப்போது ஓய்வு) தான். அவர் தான் என்னை சித்ரவதை செய்து கொலையை ஒப்புக்கொள்ள வைத்தார். இப்போது உண்மை தெரிந்துவிட்டது. ஆனால் பொய் குற்றச்சாட்டால் நான் சித்ரவதை மற்றும் இரண்டரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்துவிட்டேன். போலீசார் மீது நடவடிககை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி மண்டியா எஸ்பி ஷோபா ராணி கூறுகையில், ''கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் மஞ்சு உயிருடன் உள்ளார். அவரை காப்பகத்தில் வைத்துள்ளோம். ராஜேஷ் கொலையை ஒப்புக்கொண்டதால் போலீசார் கைது செய்தனர். தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரபாகர் ஓய்வு பெற்றுள்ளார். ராஜேஷ் குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்தக்கட்டமாக விசாரிக்கப்படும்'' என்றார்.


Click it and Unblock the Notifications
