மேகதாது அணை எங்கள் உரிமை! கர்நாடக முதல்வர் பேச்சை பாருங்க! டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்!
பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று கர்நாடகா நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார், மேகதாது எங்கள் உரிமை என்று கூறியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, "மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது எங்களின் உரிமை மற்றும் கடமையாகும். இதிலிருந்து எந்த நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தமிழக தலைவர்களின் எதிர்ப்புக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் நடப்பது வெறும் அரசியல் மட்டுமே! எதிர்ப்பதற்கு பதிலாக தமிழகம் ஒரு குழுவை அனுப்பட்டும். நான் அவர்களை அணை கட்டும் இடத்திற்கு அழைத்து சென்று.. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177 டி.எம்.சி தண்ணீரை வழங்குவதை கர்நாடகா உறுதி செய்யும் என்றும், இது முழுக்க முழுக்க கர்நாடக நிலத்தில் கட்டப்படும் சொந்த திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த திட்டத்திற்கு தேவையான வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவரிடம் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு சீக்கிரம் அனுமதி வழங்க வேண்டும் என்று சிவகுமார் வலியுறுத்தியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. "அரசியல் என்பது வேறு. மாநிலத்தின் வளர்ச்சி என்பது வேறு. நாங்கள் அரசியல் களத்தில் அரசியல் செய்கிறோம். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் ஆதரவை பெறுவது எங்கள் பொறுப்பு" என்று கூறியிருக்கிறார்.
மேகதாது மட்டுமின்றி, கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தை 500 கி.மீ தூரத்திற்கு விரிவுபடுத்த மத்திய-மாநில அரசுகளின் சம பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப குழு அமைக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
சொன்னதை செய்யாத கர்நாடகா!
இப்போது டி.கே.சிவகுமார் பேசுவதையெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால், யதார்த்தத்தில் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியாது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடி, தமிழகத்திற்கான நீரை திறந்துவிட வலியுறுத்தும். ஆனால், கர்நாடகா சுத்தமாக கண்டுகொள்ளாது. இந்த ஆண்டு கர்நாடகா மட்டும் சரியான நேரத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டிருந்தால், குறுவை சாகுபடி எதிர்பார்த்தபடி நடந்திருக்கும்.
ஆனால், குறுவை சாகுபடி பெரிய அளவுக்கு நடக்கவில்லை. காரணம், மேட்டூர் அணைக்கு கர்நாடகா சரியான நேரத்தில் தண்ணீரை திறக்கவில்லை. ஏற்கெனவே இருக்கும் அணைகளுக்கே இவ்வளவு பஞ்சாயத்து எனில்.. புதியதாக மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை கையிலேயே பிடிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications
