பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் இன்று கேட்ட பயங்கர சத்தம்.. சிறுவன் பலி.. 12 பேர் படுகாயம்!
பெங்களூர்: பெங்களூர் வில்சன் கார்டன் அருகே இன்று கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார்.
பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் சின்னயன்பாளையத்தில் இன்று காலை 8.25 மணியளவில் வீடு ஒன்றில் இன்று திடீரென குண்டு வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. வீட்டின் முதல் தளத்தின் கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் முபாரக் (8) என்ற சிறுவன் பலியானான். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அந்த வீட்டின் முதல் தளத்தில் கூரை மற்றும் சுவர்கள் முற்றிலும் இடிந்தன. மேலும் சுற்றியுள்ள சில வீடுகளுக்கு தீ பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். பலியான சிறுவனின் சடலத்தை மீட்ட தீயணைப்புத்துறையினர் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிலிண்டர் கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 8:25 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், ஒரு நிமிடத்திற்குள் காலை 8:26 மணிக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்த சிறுவன் முபாரக் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த சிலிண்டர் வெடிப்பில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், பலர் அதில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த பகுதிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கட்டட வளாகத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முபாரக் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சை செலவை அரசு ஏற்கும். சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. தொடக்க விசாரணையில் இது சிலிண்டர் வெடிப்பு போல் தெரிகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications