மோடி பெயருக்காகவே ஓட்டு போடும் மக்கள் கர்நாடகாவில்தான் அதிகம்.. இப்போ புரியுதா வெற்றி ரகசியம்!
பெங்களூர்: நரேந்திர மோடி என்ற பெயருக்காகவே ஓட்டுப்போடும் மக்கள் இந்தியாவிலேயே கர்நாடகாவில் தான் அதிகம் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தனித்து களமிறங்கிய நிலையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டது.

இதையடுத்து ஏப்ரல் 25 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் தலா 14 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஹாசன் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றனர்.
மதியம் 2 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 16 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன்மூலம் 18 தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மாறாக ஆளும் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் லோக்சபா தேர்தலின்போது இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறாத நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக அந்த கட்சி 2 இலக்கமான 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ற பெயருக்காகவே பாஜகவுக்கு ஓட்டளிக்கும் மக்கள் கர்நாடகாவில் தான் அதிகம் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த ஜுன் 1ம் தேதி கடைசி கட்ட லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அன்று மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டது. இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்து கணிப்பில் இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடியை மையப்படுத்தி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடிக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிப்பதாக கர்நாடகா கருத்து கணிப்பில் பங்கேற்ற பொதுமக்களில் 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள பாஜக ஆதரவாளர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு பிரதமர் மோடிக்காக தான் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக 19 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு பொதுமக்கள் பிரதமர் மோடியின் மீது கொண்ட பற்றால் பாஜக கூட்டணிக்கு ஓட்டளிக்கிறோம் என சொல்லவில்லை. இந்த விஷயத்தில் கர்நாடகாவுக்கு அடுத்தப்படியாக இமாச்சல பிரதேசத்தில் 10 சதவீதம் பேரும், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் 9 சதவீதம் பேரும், பீகார், குஜராத்தில் 8 சதவீதம் பேரும், உத்தரகாண்ட்டில் 7 சதவீதம் பேரும், ஒடிசா, ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்களில் தலா 6 சதவீதம் பேரும் பிரதமர் மோடிக்காக பாஜக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications