கடைசி நேரத்தில் பறந்த மெசேஜ்.. ஓயாத சித்தராமையா vs டிகே சிவக்குமார் மோதல்.. கர்நாடகாவில் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தான் இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில் சாதிய சமநிலை, பிராந்திய பிரதிநிதித்துவம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அதிகம் தரப்பட்டது. ஆனால், 33 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சர்கூட இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக சித்தராமையா முதல்வராக இருந்தார். சமீபத்தில் தான் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும், அவர் பதவியேற்ற போது அமைச்சரவை முழுமையாக பதவியேற்கவில்லை. இந்தச் சூழலில் தான் நீண்ட தாமதத்திற்கு பிறகு கர்நாடகா அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

DK Shivakumar Karnataka Congress Siddaramaiah

பெண்களுக்கு வாய்ப்பு இல்லை

அமைச்சரவையில் பெண்கள் யாருக்கும் வாய்ப்பு தராதது விவாதமாகியுள்ளது. பெண்களை மையமாக கொண்ட கிருஹ லட்சுமி, சக்தி போன்ற நலத்திட்டங்களை முன்னிறுத்தி 2023 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு தராதது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பாஜகவும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

கடைசி நேர மாற்றம்

அமைச்சரவை விரிவாக்கத்துக்காக காங்கிரஸ் மேலிடம் 20 பேரின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், இறுதியில் 19 பேருக்கு மட்டுமே ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் எம்எல்சியான காயத்ரி சாந்தேகவுடா கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். காங்கிரஸ் இதை சமாளிக்கும் வகையில் விளக்கம் தந்துள்ளது. அதேபோல விரைவில் ஒரு பெண் அமைச்சரை சேர்ப்போம் என்று முதல்வர் டிகே சிவகுமாரும் உறுதியளித்துள்ளார்.

அதேபோல பட்கல் எம்எல்ஏ மங்கல் எஸ். வைத்யாவுக்கு பதிலாக தாவணகெரே வடக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். மல்லிகார்ஜுன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். டைப் செய்யும்போது பெயர் மாறிவிட்டதாக காங்கிரஸ் கூறினாலும், அரசியல் சமநிலைக்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பெண்கள் இல்லை

முந்தைய சித்தராமையா அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த லட்சுமி ஹெப்பால்கர் கூட இந்த முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இதன் மூலம், கர்நாடக வரலாற்றில் பெண் அமைச்சர் இல்லாத அமைச்சரவை இப்போது உருவாகியுள்ளது..

கர்நாடகாவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது. கடந்த 2023ல் கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 11 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பாஜகவும் கூட 12 பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தியது. அதில் மூவர் வெற்றி பெற்றனர். அதற்கு முந்தைய 2018 தேர்தலிலும் கூட பெண்களுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.!

தற்போதைய 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் வெறும் 10 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதாவது மொத்த உறுப்பினர்களில் வெறும் 5 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே எம்எல்ஏக்களாக உள்ளனர்.

என்ன நடந்தது!

காயத்ரி சாந்தேகவுடா பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது முக்கியமானதாக கருதப்பட்டது. அவர் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை போலவே குருபா சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, சித்தராமையா ஆதரவாளர்களை சமாதானப்படுத்துவதற்கும், அமைச்சரவையில் ஒரே பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும் அவரை சேர்க்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் டிகே சிவகுமார் மற்றும் சித்தராமையா பிரிவுகளுக்கு இடையேயான மோதல் உள்ளிட்ட காரணங்களால் அவர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்களும் அவரை நீக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் சித்தராமையா பங்கேற்காததும், காங்கிரஸில் நீடிக்கும் உள்கட்சி அதிருப்தியை வெளிகாட்டுவதாக இருக்கிறது.

பாய்ந்து வரும் பாஜக

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், பெண்களின் ஆதரவால் ஆட்சிக்கு வந்ததாக கூறும் காங்கிரஸ், கர்நாடக அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சருக்குக் கூட இடம் வழங்காதது பேசுபொருள் ஆகியுள்ளது. இதை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, பெண்களுக்கு அதிகாரத்தை கொடுப்பதில் காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை என்பதையே இது காட்டுவதாக சாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+