'பிடிவாதம்' காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மனு ஏற்கத்தக்கது இல்லையாம்.. சொல்வது சித்தராமையா
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டதாக கூறினார்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்சினையை தீர்க்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி நீர் ஒதுக்கீடு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீட்டை 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது.

ஆனாலும் இந்த தண்ணீரையும் திறந்து விடாமல் கர்நாடக அரசு முரண்டுபிடித்துவருகிறது. கர்நாடக மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை என்றும் வறட்சி நீடிப்பதாகவும் இதனால் தண்ணீரை திறந்து விட முடியாது எனவும் கர்நாடாக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலைய்ல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவிரியில் தங்களுக்கான பங்கை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ஆகஸ்ட் மாதத்திற்கான எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் செப்டம்பர் மாதத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரையும் கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் முறையிடப்பட்டது.

இதன்படி இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்க உள்ளது. இதனிடையே, தமிழகத்திற்கு காவிரியில் சுமார் 22 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளான பாஜக , ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பா.ஜனதா மண்டியாவில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தியது. கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட கூட்டவில்லை என்றும் குமாரசாமி விமர்சித்து இருந்தார். இதையடுத்து, காவிரியில் தண்ணீர் திறக்கும் விவகாரம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் கர்நாடகா தனது தரப்பு வாதத்தை வைக்கும். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு எற்கத்தக்கது அல்ல. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே காவிரி வழக்கில் கடந்த 2018 பிப்ரவரி 5 ஆம் தேதியே தீர்ப்பு வழங்கிவிட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications