சிக்கன் குழம்பு ருசியில்லை என்று கூறி மனைவி அடித்துக்கொலை.. ஏரியில் உடல் வீச்சு.. கணவர் கைது!
பெங்களூரு: பெங்களுருவில் சிக்கன் குழம்பு சரியாக வைக்கவில்லை என்று கூறி மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு சோழதேவனஹள்ளி பரப்பனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக்.
இவரது மனைவி ஷெரின் பானு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5- ம் தேதி ஷெரின் பானு வீட்டை விட்டு வெளியே சென்று மாயமானதாக கூறப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக முபாரக் ஷெரின் பானுவின் பெற்றோரிடம் எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை.
பின்னர் மகள் மாயமானது குறித்து ஷெரின் பானுவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் மருமகன் முபாரக் மீது சோழதேவனஹள்ளி போலீசில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முபாரக்கை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அப்போது முபாராக் தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசில் சரண்
இந்த நிலையில் முபாரக் சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீல் ஒருவருடன் வந்து சரணடைந்தார். அப்போது அவர் தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறினார். அப்போது முபாரக் போலீசாரிடம் கூறிய வாக்குமூலம் பின்வருமாறு:- முபாராக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனவியுடன் பெங்களூருவுக்கு வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். பெங்களூரு வந்ததில் இருந்து இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதிலும் குறிப்பாக சமையல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சிக்கன் குழம்பு வைத்துள்ளார்
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி ஷெரின் பானு கணவர் முபாரக்குக்கு சிக்கன் குழம்பு சமைத்துக் கொடுத்துள்ளார். யூடியூப் வீடியோவை பார்த்து சிக்கன் குழம்பை ஷெரின் பானு வைத்ததாக கூறப்படுகிறது. சிக்கன் குழம்பை தனது கணவருக்கு பரிமாறி உள்ளார். சிக்கன் குழம்பை சாப்பிட்ட முபாரக், சிக்கன் குழம்பு ருசியாக இல்லை என்று மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் தீவிரமாக முற்றியது.

அடித்துக் கொலை செய்துள்ளார்
இதனால் ஆத்திரம் அடைந்த முபாரக் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து மனைவி ஷெரின் பானுவ-ன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி சரிந்த ஷெரின் பானு சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் ஷெரின் பானுவின் உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வீட்டை விட்டு வெளியே எடுத்துச் சென்ற முபாரக், சிக்கனபாராவில் உள்ள ஏரியில் வீசியுள்ளார். பின்பு தலைமறைவான அவர் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்று கருதி போலீசில் சரண் அடைந்துள்ளார்.

சிறையில் அடைப்பு
இதனை தொடர்ந்து போலீசார் முபாரக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைந்தனர். மேலும் சிக்கனபாராவில் உள்ள ஏரியில் வீசப்பட்ட ஷெரின் பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சிக்கன் குழம்புக்காக மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெங்களூரு சோழதேவனஹள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications