ஆப்பு ரெடியா இருக்கு! பிரம்மாஸ்த்திரத்தை கையில் எடுக்கும் சிவிஎஸ்! எடப்பாடிக்கு எதிர்பாராத ஷாக்!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்புகளுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தனக்கு தான் ஆதரவு இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வருகிறார். அதே நேரத்தில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என கூறிவரும் சி.வி.சண்முகம், அதிமுக பொது குழுவை தானே கூட்டப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்கின்றனர் அதிமுகவினர்.
தமிழக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை உருவாக்கும் வகையில் அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்த பிறகு, கட்சிக்குள் எழுந்த அதிருப்தி தற்போது வெளிப்படையான மோதலாக மாறியிருக்கிறது.

ஒரு பக்கம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். மறுபக்கம் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக உட்கட்சி மோதல்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து பல தரப்பில் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தவெகவுடன் கூட்டணி அமைக்காதது மிகப்பெரிய தவறு என சில முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்க தொடங்கினர். இந்த நிலையில் தான் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது, கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி
இதனைத் தொடர்ந்து, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி பல நிர்வாகிகளின் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை நியமித்து அதிகாரத்தை தன் வசம் வைத்திருக்க முயன்றார். ஆனால் அதற்கு எதிராக சண்முகம் தரப்பும் பதிலடி கொடுத்தது. "பழனிசாமியின் நடவடிக்கைகள் செல்லாது" என்று அறிவித்த அவர்கள், பொதுக்குழுவை கூட்டி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள்
இந்த சூழ்நிலையில்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டினார் பழனிசாமி. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவருக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழகம் முழுவதும் பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்ததால்தான் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன" என்று கூறி, அவருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஜெயக்குமார்
ஆனால் இந்த கூட்டமே பழனிசாமிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், அதிமுகவில் மொத்தம் 82 மாவட்டச் செயலாளர்கள் இருந்தும், அதில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே நேரடியாக கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மேலும், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்னும் எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதும் கவனிக்கப்படுகிறது.
தவெகவுடன் கூட்டணி
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், "தோல்விக்கான காரணங்களை திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும். அதற்காக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், "தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நாங்கள் முன்பே கூறினோம். ஆனால் பழனிசாமி அதை ஏற்கவில்லை. இப்போது பிரச்சினை தீவிரமான பிறகு சமரசம் பேசுகிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுக்குழு
அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு பேர் கோரிக்கை வைத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சண்முகம் தரப்பு வாதிடுகிறது. இதையே ஆயுதமாக வைத்து, கட்சிக்குள் ஆதரவை பெருக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், பொதுக்குழு கூட்டப்பட்டால் அது தனது பொதுச் செயலாளர் பதவிக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்ற அச்சத்தில் பழனிசாமி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
எடப்பாடி பதவிக்கு சிக்கல்
அதனால் தான் "பேசித் தீர்க்கலாம்" என்ற சமரச சைகையை அவர் காட்டியிருந்தாலும், பொதுக்குழு கூட்டுவது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. இந்நிலையில், சிவி சண்முகம் தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்ட தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஐந்தில் ஒரு பங்கு ஆதரவு இருந்தாலே பொதுக்கூட்டவை கூட்ட வேண்டும் என்ற அதிமுக விதி இருக்கும் நிலையில், சி.வி சண்முகம் தரப்பில் ஐந்தில், மூன்று பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர். மேலும், எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களும் தங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என கூறும் சிவி சண்முகம், பொதுக்குழுவை கூட்டினால் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்குத் தான் சிக்கல் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications