யுவ தசராவை தொடக்கி வைக்கும் பிரபுதேவா! மைசூரில் களைகட்டும் தசரா திருவிழா! பண்டிகை மோடில் கர்நாடகா
பெங்களூர்: பிரபல திரைப்பட நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, மைசூர் தசராவின் முக்கிய அங்கமான 'யுவ தசரா' நிகழ்ச்சியை தொடங்கி வைக்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மைசூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் பிரபுதேவாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
அவருக்கு மைசூர் பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து, பொன்னாடை மற்றும் மலர்மாலை சூட்டி மாவட்ட நிர்வாகத்தினர் தங்களது கௌரவத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மைசூர் தசரா விழாவின் கலாச்சார கொண்டாட்டங்களில் யுவ தசரா இளைஞர்களை பெரிதும் கவரும் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த விழாவில் பல்வேறு கலைக்குழுக்களின் நடன நிகழ்ச்சிகளும், பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

தசரா விழாவின் ஒரு பகுதியாக முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் நடத்தப்படும் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார மற்றும் கலை விழாதான் யுவ தசராவாகும். இந்த விழாவில் இந்திய திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள், பாலிவுட் மற்றும் தென்னிந்திய புகழ் புகழ்பெற்ற பின்னணி பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது கலை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள்.
கர்நாடகா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் கலைக்குழுக்கள் தங்களின் நடனம், இசை மற்றும் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்த இந்த விழா ஒரு மிகப்பெரிய மேடையாக அமைகிறது. பாரம்பரிய நடனங்கள் ஒருபுறம் இருந்தாலும், ராக் மியூசிக், பாப் இசை, நவீன மேற்கத்திய நடனங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் போன்றவை இந்த விழாவின் முக்கியமானதாக இருக்கும்.
மைசூர் மகாராஜா கல்லூரி மைதானம் போன்ற பெரிய திறந்தவெளி மைதானங்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இதை காண்பதற்கே கர்நாடகா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் மைசூரில் குவிவார்கள்


Click it and Unblock the Notifications
