ஃபிட்டான நடிகர்.. திடீர் மாரடைப்பு.. புனித் ராஜ்குமார் மரணம்.. ஜிம்மில் நடந்தது என்ன?
பெங்களூர்: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது இந்திய திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
இன்று காலை புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார். 46 வயது நிரம்பிய புனித் ராஜ்குமார் பாரம்பரியமான சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ராஜ்குமார் பிரபல கன்னட நடிகர். இவரின் அண்ணன் சிவ ராஜ்குமாரும் பிரபல நடிகர்.

அதிர்ச்சி
சினிமா உலகில் பிட்டாக இருக்கும் நடிகர்களில் புனித் ராஜ்குமாரும் ஒருவர். தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த கூடியவர். துடிப்பான நடனம், ஜிம் உடற்பயிற்சி, சண்டை பயிற்சி என்று மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒருவருக்கு இப்படி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்
இரண்டு நாட்களுக்கு முன் கூட பஜ்ரங்கி 2 படத்தின் விழாவில் கலந்து கொண்டார். பெங்களூரில் உள்ள பிரபல தனியார் ஜிம் ஒன்றுக்கு இவர் தினசரி செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று ஜிம்மில் இவர் எடை தூக்கி பயிற்சி மேற்கொண்டு இருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கேயே இவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.

மோசமான நிலை
11.40 மணிக்கு இவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு இவர் ஐசியூ வார்டில் உடனடியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அப்போதே இவரின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே இவரின் உடல்நிலை மோசமாகத்தான் இருந்துள்ளது.

இதயம் செயல்படவில்லை
விக்ரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது இவர் சுயநினைவில் இல்லை. அதோடு இவர் Cardiac Asystole நிலையில் இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதாவது இவரின் இதயம் துடிக்கவில்லை. இசிஜி மானிட்டரில் "ஃபிளாட் லைன்" இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவசர முதலுதவி அளிக்கப்பட்டது.

மரணம்
பின்னர் Advanced cardiac resuscitation வகையிலான மாரடைப்பிற்கான சிகிச்சைகள் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொடர் சிகிச்சைகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வெறும் 46 வயது மட்டுமே கொண்ட நடிகர், இப்படி மாரடைப்பால் மரணம் அடைந்தது இந்திய திரையுலகை உலுக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications