ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சலசலப்புகள், சித்தராமையாவின் ராஜினாமாவுக்கு பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. இருப்பினும், எம்பி பதவியை சித்தராமையா ஏற்காதது கடும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
கடந்த 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு பின்னால் டி.கே.சிவகுமாரின் உழைப்பு இருந்தது. ஆனால், சித்தராமையாவையும் புறந்தள்ளிவிட முடியாது. எனவே யாரை முதலமைச்சராக்குவது? என்பது குறித்து நீண்ட இழுபறி இருந்தது.

இப்படியே போனால் சரியா வராது என்று யோசித்த கதர் தலைவர்கள், பாதி காலத்துக்கு சித்தராமையாவும், அதன் பின்னர் டி.கே.சிவகுமாரும் முதலமைச்சராக இருக்கலாம் என்று ஐடியா சொன்னார்கள். இருவரும் இதற்கு ஓகே சொன்ன நிலையில், 2023ல் சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதவி விலகவில்லை. இப்போது 3 ஆண்டுகள் முழுமையாக முடிந்துவிட்டது. எனவே சிவகுமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடியை உயர்த்தினர்.
இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தேவையற்ற சலசலப்புகள் உருவாகின. எனவே டெல்லி தலைமை இருவரையும் அழைத்து பேசியது. ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி சித்தராமையா தனது பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தலைமை சொல்ல.. வேறு வழியின்றி சித்தராமையாவும் பதவி விலகிக்கொண்டார். இதற்கு கைமாறாக மாநிலங்களவை எம்பி பதவியை தருவதாக தலைமை சொன்னது. சித்தராமையா ஏற்றுக்கொள்ளவில்லை.
இது குறித்து விளக்கமளித்த அவர், "நான் தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். எனக்கு தேசிய அரசியலில் விருப்பம் இல்லை. எனவே மாநிலங்களவை எம்பி பதவி குறித்து என்னிடம் கேட்கப்பட்டதற்கு நான் மறுத்துவிட்டேன். நான் கர்நாடக அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன்.
தலைமை சொன்னால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதேபோல இப்போது தலைமையின் பேச்சை கேட்டு நான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
அதாவது தனது பதவி போனாலும், நான் மீண்டும் எழுந்து வருவேன்.. எனக்கு எண்டே கிடையாது என்கிற டோனில் சித்தராமையா கூறியிருக்கிறார். முன்னதாக, "நான் முதலமைச்சராக பதவி வகிப்பது இதுவே கடைசி முறை" என்று 2023ல் சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்பதற்காக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications