"விவசாயி மகனை திருமணம் செய்தால்" ரூ.2 லட்சம் நிதி.. குமாரசாமி வாக்குறுதி.. எதற்காகவாம் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணிற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி கொடுப்போம் என்று முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுளது. அதன்படி வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகவை பொறுத்தவரை மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும்.

கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவிடம் இருக்கும் தென்மாநிலம் கர்நாடகா மட்டும் தான். இதனால், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா பலவிதமான வியூகங்களை வகுத்து வருகிறது. மறுபக்கம் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடித்து மீண்டும் கர்நாடகாவில் ஆட்சிக் அரியணையில் அமர தீவிர தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டுள்ளது. அதுபோக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியும் கிங்மேக்கராக மாறும் முனைப்புடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
123 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்துடன் காய் நகர்த்தி வரும் ஜேடி(எஸ்) முதல் கட்டமாக 93 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏனைய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணிற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி கொடுப்போம் என்று முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக எச்.டி குமாரசாமி தனது பஞ்சரத்னா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது கூறியதாவது:- விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என எனக்கு மனுக்கள் வருகின்றன. விவசாயிகளின் மகன்களை பெண்கள் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வாக்குறுதியை அளிக்க உள்ளேன். அதன்படி விவசாயி மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும். நமது பாய்ஸ்களின் சுயமரியாதை பாதுகாக்கும் விதமாக அறிவிக்கப்படும் ஒரு திட்டங்களில் இதுவும் ஒன்று" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications