ஆன்மீக குருவின் காதல்.. உயிருடன் புதைக்கப்பட்ட கோடீஸ்வரி! இந்தியாவையே உலுக்கிய ஷக்ரே களீலி கொலை
பெங்களூர்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. கனவிலும் நினைக்காத பல குற்றங்கள் பெண்கள் மீது கடந்த காலங்களில் நடந்துள்ளது. அப்படியொரு அதிர வைக்கும் சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்தது. இந்த குற்றம் அப்போது நாட்டையே அதிர வைக்கும் அளவுக்கு கொடூரமானதாக இருந்தது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
பெங்களூரை சேர்ந்தவர் ஷக்ரே கலீலி. அழகு, செல்வம், செல்வாக்கு என அனைத்தையும் பெற்றிருந்த அவர், திடீரென 1991ல் மாயமானார். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவரது வீட்டின் முற்றத்தை தோண்டியபோது நடந்த சம்பவம், இந்திய குற்ற வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக மாறியது.

ஷக்ரே கலீலி
1947ல் பிறந்த ஷக்ரே கலீலி, மைசூர், ஜெய்ப்பூர், ஹைதராபாத் சமஸ்தானங்களின் முன்னாள் திவானாக இருந்த சர் மிர்சா இஸ்மாயிலின் பேத்தி. பெரும் சொத்துகள், சமூக செல்வாக்கு கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார். 18 வயதில் இந்திய வெளியுறவு துறை அதிகாரி அக்பர் மிர்சா கலீலியை திருமணம் செய்து கொண்டார். வெளிநாடுகளில் வாழ்ந்த அவர், பின்னர் பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டார். இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் இருந்தனர். இருப்பினும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
1982ல் முரளி மனோகர் மிஸ்ரா என்ற நபரை ஷக்ரே சந்தித்தார். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட மிஸ்ரா, பின்னர் தனது பெயரை ஸ்வாமி ஸ்ரத்தானந்தா என்று மாற்றிக் கொண்டு, ஆன்மீக குருவானார். சொத்து பிரச்சினைகளில் உதவுவதாக சொல்லி ஷக்ரேவின் நம்பிக்கையை பெற்ற அவர், பின்னர் அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தார். 1986ல் இருவரும் திருமணம் கூட செய்து கொண்டனர். குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தாலும், ஷக்ரே தனது முடிவை மாற்றவில்லை.
எல்லாமே மாறியது
ஆனால், திருமணத்துக்கு பிறகு எல்லாமே மாறியது. ஷக்ரேவின் சொத்துகள், பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை ஸ்ரத்தானந்தா அனுபவித்தார். ஆனால், இருவரும் மகிழ்ச்சியாக இல்லை. பண விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
அப்போது 1991 ஏப்ரலில் ஷக்ரே திடீரென காணாமல் போனார். குடும்பத்தினர் கேட்டால்.. "வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்", "சில நாட்களில் திரும்பி வருவார்" என்று ஸ்ரத்தானந்தா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்கத்தை கூறி வந்தார். நாட்கள் மாதங்கள் ஆனது. ஆனாலும், அவர் திரும்பவில்லை. அவரது மகள் சபா இதை நம்பவில்லை. போலீசாரை அணுகி புகாரளித்ததோடு, நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.
சிக்கினார்
ஆனாலும் ஏதேதோ சொல்லி ஸ்ரத்தானந்தா 3 ஆண்டுகள் சமாளித்தார். இதையடுத்து விசாரணை தீவிரமடைந்தது. 1994ல் கர்நாடக போலீசார் நடத்திய ரகசிய நடவடிக்கையில் சிக்கிய ஸ்ரத்தானந்தா வீட்டின் முற்றத்தில் ஒரு இடத்தை காட்டினார். அங்கு போலீசார் தோண்டியபோது, பல அடி ஆழத்தில் மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டி போன்ற பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் உள்ளே ஷக்ரேவின் எலும்புக்கூடு கிடந்தது. இதில் மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம் என்னவென்றால், அவரது ஒரு கை அபபோதும் மெத்தையை இறுகப் பற்றிய நிலையிலேயே இருந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "முதலில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, பிறகு அப்படியே அந்த பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டாராம். மயக்கம் தெளிந்த பிறகு அவர் உயிருடன் வெளியே வர போராடியிருக்கலாம்.. பல மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை போராடி மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம்" என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நாடு முழுக்க முக்கியத்துவம் பெற்றன. உடல் தோண்டி எடுக்கப்பட்ட காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்குகளில் இதுவும் ஒன்று. டிஎன்ஏ ஆதாரங்களும் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சிகளாக ஏற்கப்பட்டன.
தண்டனை
நீண்ட விசாரணைக்கு பிறகு 2005ல் பெங்களூர் நீதிமன்றம் ஸ்ரத்தானந்தாவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. ஆனால், 2008ல் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை மாற்றி, ஆயுள் தண்டனையாக மாற்றியது. மனைவியை கொன்று வீட்டின் முற்றத்திலேயே புதைத்துவிட்டு, அதற்கு மேலே பல ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரத்தானந்தாவின் செயல் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications
