சித்தராமையா மீதான முறைகேடு புகாரை 6 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: ரூ.4,000 கோடி 'முடா' முறைகேடு புகாரின் அடிப்படையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது 'முடா' முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மூலம், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள், முறைகேடு காரணமாக சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
'முடா' குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ், ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுவதாக விமர்சித்திருக்கிறது. மறுபுறம் சித்தராமையா தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது.
முடா விவகாரத்தில் தன் மீது விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று, ஆக.19ம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார் ஆகியோர் வாதாட, ஆளுநருக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசுக்காக அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆகியோர் வாதாடியிருந்தனர்.
இதற்கிடையில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வரட்டும் என்று கூறி, சிறப்பு நீதிமன்றம் விசாரணையை நிறுத்தி வைத்திருந்தது.
மறுபுமற் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் மீதான விசாரணை கடந்த 12ம் தேதி முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று தீர்ப்பு வெளியாகியிருந்த நிலையில், சித்தராமையா மீதான விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், இந்த வழக்கின் பிடி இறுக தொடங்கியுள்ளது.
வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், சிறப்பு நீதிமன்றமும் இது குறித்து வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த வழக்கை மைசூர் லோக் ஆயுக்தா போலீஸ் விசாரணை செய்ய வேண்டும் என்றும், 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் என நீதிமன்றங்கள் சித்தராமையாவுக்கு செக் வைத்துள்ளதால், கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications