SWAN ஆலோசனை குழுவில் பெங்களூர் ஐஏஎஸ் அதிகாரி.. தமிழகத்தில் பிறந்தவருக்கு கிடைத்த கவுரவம்
பெங்களூர்: உலக அளவில் ஸ்மார்ட் நீர் மேலாண்மை துறையில் முன்னணியில் உள்ள அமைப்பான ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) தனது ஆலோசனை குழுவை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவராக இருக்கும் ராம் பிரசாத் மனோகருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

பெங்களூரில் BWSSB எனும் பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவராக இருப்பவர் ராம் பிரசாத் மனோகர். ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.
‛ஸ்வான்’ அமைப்பு
இந்நிலையில் தான் SWAN (Smart Water Networks Forum) அமைப்பானது தனது 5வது ஆலோசனை குழுவை அமைத்தது. இந்த அமைப்பு கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நீர் பயன்பாடு, நீர் பிரச்சனைக்கான தீர்வு வழங்குபவர்கள், நீர் துறை சார்ந்த வல்லுநர்களை உலகளவில் குழுவாக ஒன்றிணைத்து குடிநீர், கழிவுநீர், மழைநீர் உள்ளிட்டவற்றை கையாள்வது தொடர்பாக அவர்கள் வழங்கும் ஆலோசனைகளை வாங்கி ஸ்மார்ட், டேட்டா அடிப்படையில் தீர்வுகளை வழங்கும் அமைப்பாகும்.
குழுவில் யார் யார்?
இந்த அமைப்பின் ஆலோசனை குழுவில் தமிழகத்தை பிறந்து வளர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும்,பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவருமான ராம்பிரசாத் மனோகர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள்ளார்.
இந்த குழுவில் அமெரிக்காவின் லுசிவிலி எம்எஸ்டியின் திட்ட இயக்குநரும், வியூக முன்னோடியுமான ஜோனெட்டா இ. இங்கிலிஷ், ஆஸ்திரேலியாவின் பஸ்ஸெல்டன் வாட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (ஓவன்) டேவிட் ஹியூஸ், போர்ச்சுக்கல்லின் ஜோனா அராவுஜோ, கனடாவின் அராஷ் ஃபராஜியன்,பிரேசிலின் டெனிஸ் மாயா உள்ளிட்டவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இவர் மட்டுமே..
பெங்களூரை ஸ்மார்ட் நீர் மேலாண்மையின் முன்மாதிரியான நகரமாக மாற்றி வருவது, பெங்களூர் நகரில் ஏஐ மற்றும் டேட்டா அடிப்படையிலான திட்டங்களை பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தில் ராம்பிரசாத் மனோகர் சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியா சார்பில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே பிரதிநிதி என்றால் அது ராம் பிரசாத் மனோகர் தான். இவர் ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து முக்கிய ஸ்மார்ட் நீர் வல்லுநர்களுடன் சேர்ந்து செயல்பட உள்ளார். இந்த உறுப்பினர்கள் நீர் மேலாண்மையில் உள்ள சிக்கல்கள், பிராந்திய அளவிலான பிரச்சனை, ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
சித்தராமையா - டிகே சிவக்குமார்
இதுபற்றி ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ‛‛தொலைநோக்கு பார்வையுடன் ‛பிராண்ட் பெங்களூர்' என்ற இலக்கை முன்வைத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி உலகத் தரம் வாய்ந்த ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது அதற்கு கிடைத்த அங்கீகாரம் இதுவாகும். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பணி என்ன?
அதேபோல் பெங்களூர் மக்களுக்கு சேவை செய்யும் பிடபிள்யூஎஸ்எஸ்பியின் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் ஊழியர்களின் ஓய்வில்லா உழைப்புக்கும் நான் இதனை அர்ப்பணிக்கிறேன். இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய நீர் சவால்களுக்குச் சிறந்த தீர்வுகளைக் கண்டறிய இந்தகுழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்'' என்றார்.
வரும் ஜுன் மாதம் 2ம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் டம்பாவில் SWAN அமைப்பின் 16வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் எப்படி மாற வேண்டும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நிரலுக்கான ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications