கர்நாடக காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்! சித்தராமையா, டிகே சிவகுமார் எங்கே போட்டி?
பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்காக தேர்தல் நெருக்கும் நிலையில் தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். தேர்தலுக்கான தேதி அடுத்தவாரம் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
கார்நாடக மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 80 இடங்களை கைப்பற்றியிருந்தது. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளை கைப்பற்றினால் போதுமானது. ஆனால், காங்கிரஸ் 80, பாஜக 104 மற்றம் மதசார்பற்ற ஜனதா தளம் 34 தொகுதிகளை கைப்பற்றின. எனவே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சியை அமைத்தது. ஆனால் பாஜக இந்த ஆட்சியை ஒன்றரை ஆண்டுகளில் கவிழ்த்தது.

எனவே இந்த தேர்தலில் தனித்து நின்றே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற பாரத் ஜடோ யாத்திரையில் தென் மாநிலங்களில் கர்நாடகாவுக்கு ராகுல் அதீத முக்கியத்துவம் கொடுத்திருந்ததற்கான காரணமும் இதுதான். இந்த முறை 150 தொகுதிகளை முழுமையாக கைப்பற்றுவதுதான் இலக்கு என அதற்கான வியூகங்களை வகுத்து களத்தில் பணியாற்ற தொடங்கியது காங்கிரஸ். இந்நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டிகே.சிவக்குமார் என இருவரும் பிரசாரத்தை தொடங்கினர்.
இந்நிலையில் இன்று வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ளது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்தான். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் பாஜகவுக்கு சற்று சவாலானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், 40 சதவிகித கமிஷன் தொடர்பாக மாநிலம் முழுவதும் கான்ட்ராக்ட்காரர்கள் மாநில அரசு மீது கடுமையான புகார்களை கூறியுள்ளனர். மறுபுறம் மேற்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மத ரீதியான சர்ச்கைகள், திப்பு சுல்தான் அரசியல் போன்றவை இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டுகளாகும். இது போன்ற சில குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கூறி வருகிறது. அதேபோல தனது தேர்தல் வாக்குறுதியையும் காங்கிரஸ் வலுவாக நம்பியுள்ளது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, இதே டிப்ளமோ முடித்திருந்ததால் மாதம் ரூ.1,500, அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 என பல அதிரடியான திட்டங்களை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறது. முன்னதாக சித்தராமையா கோலர் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர் வருணா தொகுதியில் போட்டுவது நேற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications