கர்நாடகா முதல்வர் பதவி..டிகே சிவக்குமாருக்கு விருந்து வைத்து பிரச்சனையை முடித்த சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இன்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமாரை தனது வீட்டுக்கு அழைத்து ‛பிரேக்பாஸ்ட்' விருந்து அளித்தார். அதன்பிறகு சித்தராமையா அளித்த பேட்டியில், ‛‛எனக்கும், டிகே சிவக்குமாருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இருவரும் சேர்ந்து செயல்பட உள்ளோம். நாளை முதல் குழப்பம் எதுவும் இருக்காது'' என்று கூறினார். இதன்மூலம் கர்நாடகா முதல்வர் பதவி விவகாரம் தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சித்தராமையா இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக கடந்துவிட்டார்.

இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இது கர்நாடகா அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதோடு காங்கிரஸ் கட்சியில் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம், சித்தராமையா- டிகே சிவக்குமார் ஆகியோரை சந்தித்து பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிட்டது.
அதன்படி இன்று காலையில் சித்தராமையா, டிகே சிவக்குமாரை தனது இல்லத்துக்கு அழைத்து காலை உணவு வழங்கினார். அதன்பிறகு அவர்கள் கர்நாடகா விவகாரம் பற்றி பேசினார். இருவருக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த மீட்டிங் பாசிட்டிவாக பார்க்கப்பட்டது.
இந்த விருந்துக்கு பிறகு டிகே சிவக்குமாரும், சித்தராமையாவும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சித்தராமையா கூறியதாவது: பிரேக்பாஸ்ட் விருந்து நல்லபடியாக முடிந்தது. நாங்கள் மூன்று பேரும் (சித்தராமையா, டிகே சிவக்குமார், ஆலோசகர்) மகிழ்ந்தோம். குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் விரும்புகிறோம்.
எங்களின் திட்டம் என்பது உறுதியானதாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியம்.அதபோல் 2028 சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக 2023 சட்டசபை தேர்தலை போல் நானும், டிகே சிவக்குமாரும் சேர்ந்து செயல்பட உள்ளோம். எனக்கும், டிகே சிவக்குமாருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
முன்பு மட்டுமின்றி இப்போதும் கருத்து வேறுபாடு இல்லை. மீடியா தான் இந்த குழப்பத்தை உருவாக்கியது. நாளை முதல் குழப்பம் எதுவும் இருக்காது. கட்சியின் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை கவனித்து நாங்கள் கீழ்படிவோம்'' என்றார். இதன்மூலம் கர்நாடகா முதல்வர் பதவியில் சித்தராமையாவே தொடர்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications