"நாங்களே கடனில் தவிக்கிறோம்".. கொள்ளையர்களிடம் கெஞ்சிய தம்பதி.. மனம் இறங்காமல் 3 பேர் செய்த செயல்
பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறி 2 மாதங்களே ஆன நிலையில் முகமூடி அணிந்த 3 பேர் கும்பல் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்தது. நகை, பணத்தை அள்ளிய அந்த முகமூடி கொள்ளை கும்பலிடம் அந்த தம்பதி 'நாங்களே கடனில் தவிக்கிறோம். எங்களை விட்டு விடுங்கள்'' என கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா புரா கிராமத்தில் வசித்து வருபவர் மலே சோனப்பா. இவரது மனைவி பெயர் மஞ்சுளா. இவர்கள் 2 மாதங்களுக்கு முன்பு தான் அங்கு புதிதாக வீடு கட்டி குடியேறினர். இவர்களின் வீடு தனியாக உள்ளது.
வீட்டில் மலே சோனப்பா - மஞ்சுளா ஆகியோர் மட்டுமே தரை தளத்தில் வசித்து வருகின்றனர். முதல் மாடியில் மகன் உள்ளார். இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் 3 பேர் கும்பல் வீட்டிற்குள் நுழைந்தது. அவர்கள் 3 பேரும் முகமூடி மற்றும் 'மங்கி' குல்லா அணிந்திருந்தனர்.
தரைதளத்தில் நுழைந்து நகை - பணத்தை தேடினர். வீட்டில் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த தம்பதி கண்விழித்தனர். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த தம்பதி மலே சோனப்பா- மஞ்சுளா வீட்டில் மின்விளக்கை ஆன் செய்தனர். இதில் பதறிப்போன 3 கொள்ளையர்கள் தம்பதியை பிடித்து ஆயுதம் காட்டி மிரட்டினர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
பிறகு வீடுகளில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்து 117 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரத்தை மட்டும் எடுத்து சென்றனர். இருப்பினும் கொள்ளையர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதைவிட தம்பதியிடம் அதிகப்படியான பணம், நகை இருக்க வேண்டும் என்று நினைத்தனர். இதனால் நகை, பணம் எங்கு உள்ளது? என்று மிரட்டினர்.
அப்போது அவர்கள் ''வங்கியில் இருந்து நகையை எடுத்து வந்துள்ளீர்கள். உங்களின் மகள் வெளிநாட்டில் நர்சாக பணியாற்றி வருவதோடு, ரூ.2 லட்சம் அனுப்பி உள்ளார்'' என்ற விவரத்தை சொல்லி கேட்டனர். அதற்கு அந்த தம்பதி மறுத்தனர். ''மகள் பணம் அனுப்பவில்லை. வங்கியில் உள்ள நகையை எடுத்து வரவில்லை. எங்களை விட்டு விடுங்கள். நாங்களே வீடு கட்டி கடனில் இருக்கிறோம்'' என தம்பதி கூறினர்.
ஆனாலும் இரக்கம் காட்டாத அந்த கொள்ளையர்கள் தம்பதியை அழைத்து சென்று மூடப்பட்டு இருந்த கபோர்ட்டுகளை திறக்கும்படி சொல்லி பார்த்தனர். ஒன்றும் இல்லாததால் கொள்ளையர்கள் 117 கிராம் தங்க நகைகள், ரூ. 8 ஆயிரத்துடனும், அவர்களின் செல்போனை பறித்து கொண்டும் சென்றனர். இந்த சம்பவம் பற்றி விஜயாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தம்பதியின் மகள் வெளிநாட்டில் இருப்பது பற்றி கொள்ளையர்கள் அறிந்து வைத்துள்ளதால் அவர்களுக்கு தெரிந்தவர்கள் தான் யாராவது கொள்ளையர்களாக வந்து கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
