Thug Life: கர்நாடகாவில் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்.. கன்னட அமைப்பு பகிரங்க மிரட்டல்
பெங்களூர்: நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் திரையிடக்கூடாது என்றும் ஒருவேளை இதனை மீறி கமலின் இந்த படம் திரையிடப்பட்டால், அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவோம் என்று கன்னட அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இதேபோன்று கமலின் படம் கர்நாடகாவில் வெளியானால், கர்நாடகா போர்க்களமாக மாறும் என்றும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் பந்த் நடத்தப்படும் என்றும் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
நாயகன் படத்திற்கு பிறகு, தக் லைஃப் படத்தின் மூலமாக மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி பற்றி பேசியதற்கு கர்நாடகாவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கன்னட மொழி பற்றி பேச்சு
நடிகர் கமல்ஹாசன் தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என்றும் மிரட்டல் விடுத்தனர். கன்னட அமைப்புகள் சார்பில் கமலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து கமல்ஹாசனின் 'தக் லைப்' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கன்னட அமைப்புகளிடமிருந்து வலியுறுத்தல்கள் வலுக்கத் தொடங்கியது.
மன்னிப்பு கேட்க முடியாது
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நடிகர் கமல்ஹாசன் கடந்த 30 ஆம் தேதித்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. ஆனால் கமல்ஹாசன் தான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் தான், கர்நாடகாவில் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் மீறி திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்றும் கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு கூறியுள்ளது.
தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம்
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறுகையில், "தன் பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல், தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார். தொடர்ந்து இதே மனப்போக்கினை கடைப்பிடித்தால், கர்நாடகாவில் உள்ள எந்த ஒரு திரையரங்கிலும் அவரது திரைப்படம் திரையிடப்படக் கூடாது. இதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டோம். ஒருவேளை இதனை மீறியும் கமலின் தக் லைஃப் படம் திரையிடப்பட்டால், அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவோம்.
இந்த செயலுக்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தாலும் செய்து கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா உலகில் பெரிய நடிகராக இருக்கிறார். கமல் மீது எங்களுக்கு அதிகமான மதிப்பு இருந்தது. ஆனால், தமிழர்களை கவர வேண்டும் என்பதற்காக, கன்னடத்துக்கு எதிராக பேசி இருக்கிறார். மற்ற மொழிகளைப் பற்றி பேசுகையில் அவர்களுக்கு குறைந்தப்பட்ச அறிவு இருக்க வேண்டும். இவரது படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக் கூடாது" என நாராயண கவுடா கூறியுள்ளார்.
வாட்டாள் நாகராஜ் கருத்து
முன்னதாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் மிகப்பெரிய பந்த் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "கமல்ஹாசனின் படம் வெளியானால், கர்நாடகா போர்க்களமாக மாறும். கன்னட மொழி பற்றி பேசிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகாவில் பந்த் நடத்தப்படும். எல்லாவற்றிற்கும் மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் ஆதரவாளர்கள் தயாராக இருக்க வேண்டும்
நாங்கள் அனைத்து அமைப்புகளுடனும் பேசி ஆதரவைக் கேட்போம். மாநில அரசும் அவசரமாக ஒரு சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும். கன்னடத்தின் புகழ்பெற்ற வரலாற்றை பற்றி நாம் விவாதிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications