"தலைநகர் பகுதி.." டெல்லியை போலவே.. பெங்களூரில் ஸ்பெஷல் திட்டத்தை இறக்கும் பாஜக.. யாருக்கு நன்மை
பெங்களூர்: கர்நாடக தேர்தலுக்காக பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியான நிலையில், இதில் தலைநகர் பெங்களூர் குறித்து வாக்குறுதி இருந்தது.
கர்நாடகாவில் இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது.

பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கர்நாடகாவில் இறங்கி தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று கூட பிரதமர் நரேந்திர மோடி அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
தேர்தல் அறிக்கை: இந்தச் சூழலில் இன்று பாஜக சார்பில் கர்நாடக தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஏழைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும், ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி நாட்களில் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்குவோம் என பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.
அதேபோல பாஜக தேர்தல் அறிக்கையில் மற்றொரு முக்கிய வாக்குறுதி இருந்தது. அதாவது டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியை போல், கர்நாடகாவில் பெங்களூருவை உள்ளடக்கிய மாநில தலைநகர் பகுதி உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக வென்றால் விரிவான நகர மேம்பாட்டு திட்டத்தை கொண்ட ஒரு 'மாநில தலைநகர் பகுதி' உருவாக்க உள்ளதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த 'மாநில தலைநகர் பகுதி' மூலம் விரிவான, நகர மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த போக்குவரத்து நெட்வொர்க்குகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றுடன் பெங்களூருவை அடுத்த தலைமுறைக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என்று பாஜக கூறியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் சர்வதேச மையமாக பெங்களூருவை மாற்ற திட்டமிட்டுள்ளனர். மேலும், பெங்களூருவை ஒட்டிய மாவட்டங்களும் இந்த மாநில தலைநகர் பகுதிக்குள் வரும் என்பதால் அதையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஒரு ஒப்பீடு: தலைநகர் டெல்லியை சுற்றி தேசிய தலைநகர் பகுதி இருக்கிறது. இது டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஒரு பகுதி ஆகும். ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகள் இதில் உள்ளது. இதற்கான திட்டமும் இதன் வளர்ச்சி பணிகளை முடிவெடுக்கும் NCRPB அமைப்பும் 1985இல் உருவாக்கப்பட்டது,
என்சிஆர் பகுதியில் டெல்லி, ஃபரிதாபாத், காசியாபாத், குருகிராம், நொய்டா, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகள் இருக்கும். அதேபோல கர்நாடக தலைநகர் பெங்களூரையும் சுற்றி ஒரு மாநில தலைநகர் பகுதி உருவாக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
என்ன வித்தியாசம்: தலைநகர் பகுதி என்பது தலைநகர் மாவட்டம் அல்லது தலைநகர் பிரதேசம் என்றும் அழைக்கப்படும். இது தலைநகரைச் சுற்றியுள்ள ஒரு பகுதி அல்லது மாவட்டங்களை குறிக்கும்.. இது அந்த குறிப்பிட்ட பகுதிகளை குறிக்கும் அதிகாரப்பூர்வ சொல் இல்லை. இவை தலைநகரங்களை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே ஆகும்.

அதேநேரம் ஒரு தலைநகரம் என்பது அந்த நாடு அல்லது மாநிலத்தின் அரசு அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.. இங்குதான் அரசு கட்டிடங்கள் இருக்கும். அரசுத் தலைவர்கள் இங்கே இருந்துதான் பணிபுரிவார்கள். ஒரு நாட்டிற்கும் மாநிலத்திற்கும் தனித்தனியாக தலைநகர் இருக்கும். அவை தான் அந்த பிராந்தியங்களின் அதிகாரப்பூர்வ பெயராகும்.
திட்டங்கள் என்ன: இந்த மாநில தலைநகர் பகுதியை அறிவித்து பெங்களூர் மட்டுமின்றி சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக லண்டன் பொது போக்குவரத்தை போல பெங்களூரிலும் விரிவான பொது போக்குவரத்து அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக டிக்கெட்களை முன்பதிவு செய்ய MyBengaluru MyRoute என்ற செயலியை வெளியிட உள்ளனர்.
அதேபோல My City My Card என்ற பெயரில் அனைத்திற்கும் டிக்கெட் எடுக்கக் கூடிய ஒரு கார்டையும் அவர்கள் உருவாக்க உள்ளனர். சென்னையிலும் இதேபோல ஒரே டிக்கெட்டை கொண்டு மெட்ரோ, பஸ், ரயில் என அனைத்திலும் பயணிக்கும் திட்டம் குறித்து பரீசிலனை செய்து வருகின்றனர். அதேபோல பெங்களூரிலும் ஒரே My City My Card மூலம் பொது போக்குவரத்தில் மிக எளிமையாக பயணிக்கும் திட்டத்தை உருவாக்க உள்ளனர்.
மேலும், தலைநகர் பகுதியில் டிராபிக் நெரிசலை தடுக்க ஏஐ உதவியுடன் நடவடிக்கை, பார்கிங் வசதி, மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது என்று தலைநகர் பகுதியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதே பாஜகவின் திட்டம். இருப்பினும், இந்த தேர்தல் அறிக்கைக்கு மக்கள் என்ன மாதிரியான ரெஸ்பான்ஸை தர உள்ளனர் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
