பெங்களுரில் 5-வது மாடிக்கு வேகமாக சென்ற பல் மருத்துவ மாணவி சவுமியா.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்
பெங்களூர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியர் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சவுமியாவிற்கு 21 வயது ஆகிறது. இவர் பெங்களூரில் உள்ள யஷ்வந்தபுரத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சவுமியா, திடீரென ஐந்தாவது மாடிக்கு வேகமாக சென்று செய்த காரியம் பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தேர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 21 வயதாகும் சவுமியா என்ற மாணவி யஷ்வந்தபுரத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சவுமியா தேர்வு குறித்த பயத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மனநல பாதிப்பில் உளைச்சலில் இருந்தாராம்.

இதையடுத்து பெற்றோர், அவரை நந்தினி லே-அவுட்டில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்து 'கவுன்சிலிங்' வழங்கி வந்தனர். இந்தநிலையில் காப்பகத்தில் இருந்து சவுமியா தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்தார். பின்னர், வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து கீழே குதித்து உயிரைவிட்டுவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஹெப்பால் போலீசார் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தேர்வு பயத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் நர்ஸ் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த ஜீவிதா (வயது 24) என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி கல்யாணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 1-ந் தேதி காலையில் ஜீவிதா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜீவிதா உயிரிழந்தார். இது சம்பந்தமாக வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் பெங்களூர் நர்சு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications