“தவெகவுக்கு தாவிய மீன் கடை பூனைகள்.. இரவல் ஆட்சி நடத்துகிறார் விஜய்”.. அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கு
சென்னை: தவெகவுக்கு தாவியவர்களை மீன்கடை பூனைகள் என அதிமுக எம்.பி இன்பதுரை விமர்சித்துள்ளார். செயற்கையாக காலி இடங்கள் உருவாக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், சபாநாயகர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டார் என்றும் இன்பதுரை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் (அதிமுக) தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், பெருந்துறையில் ஜெயக்குமாரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர். அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா (அதிமுக) வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்குமாறும், தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செலவிடப்படும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக எம்.பி இன்பதுரை, "செயற்கையாக காலி இடங்கள் உருவாக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையா பதட்டத்துடன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் முன்பே அழைத்து விசாரித்திருக்க வேண்டும். சபாநாயகர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டார். சபாநாயகர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
தவெகவுக்கு தாவியவர்கள் மீன் கடை பூனைகள். விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய். தவெகவுக்கு ஓட்டு போடக்கூடாது என்பதற்காகவே விசிக, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் வாக்களித்தனர். இரவல் வாங்கி ஆட்சி நடத்தும் விஜய் ஒரு வாடகை சக்தி" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications